Published : 28 Sep 2019 12:35 PM
Last Updated : 28 Sep 2019 12:35 PM

தமிழ் தெரியாதவர்கள் இனி வெற்றி பெற முடியாது: டிஎன்பிஎஸ்சி அறிவிப்புக்கு ராமதாஸ் வரவேற்பு

டிஎன்பிஎஸ்சியின் க்ரூப் 2, 2ஏ தேர்வுகள் குறித்த புதிய அறிவிப்புக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வில் பொதுத்தமிழ் பாடம் நீக்கப்பட்டது என்று தவறாகச் சித்தரிக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் தமிழ் தெரியாதவர்கள் குரூப்-2 , 2-A தேர்வில் தேர்ச்சியடைய முடியாது என்கிற நிலையில் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. திருக்குறள், தமிழக வரலாற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழ் பாட மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது மட்டுமல்லாமல் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கவும், ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கவும் முதன்மைத்தேர்வில் 100 மதிப்பெண்களுக்கான வினாத்தாள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கட்டாயம் 25 மதிப்பெண்கள் பெற வேண்டும்.

அப்படித் தேர்வு பெறாதவர்களின் அடுத்த தாள் திருத்தப்படாது, அவர்கள் நிராகரிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் மட்டுமே குரூப்-2 தேர்வு எழுத முடியும் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழைக் கட்டாயம் படிக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சியின் அறிவிப்புக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ள தொகுதி-2 முதனிலை தேர்வில் பொதுத் தமிழ் தாள் நீக்கப்பட்டாலும் அதில் கேட்கப்படும் வினாக்கள், முதனிலை மற்றும் முதன்மைத் தேர்வில் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழ் இலக்கியங்கள், திருக்குறள் என தமிழ் சார்ந்த பகுதிகள் இத்தேர்வுகளில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் தெரியாதவர்கள், தமிழைப் படிக்காதவர்கள் இனி வெற்றி பெற முடியாது என்ற நிலையை டி.என்.பி.எஸ்.சி. ஏற்படுத்தியுள்ளது. இது தமிழக மாணவர்களுக்குச் சாதகமானதாக அமையும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு பாராட்டுகள்... தமிழ் வாழ்க!'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ராமதாஸ் கருத்துக்கு ஆதரவாகவும் எதிர்ப்பு தெரிவித்தும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x