Published : 26 Sep 2019 09:56 PM
Last Updated : 26 Sep 2019 09:56 PM

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை மாவட்ட ஆட்சியர் 

சென்னை

தமிழகத்தில் படித்துவிட்டு வேலை வாய்ப்பில்லாமல் இருக்கும் இளைஞர்கள் உதவி தொகைக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தரப்பில் தெரிவித்துள்ள தகவல்:

“தமிழக அரசால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

எஸ்.எஸ்.எல்.சி தோல்வி, எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி, எச்.எஸ்.சி/ பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு போன்ற கல்வித் தகுதிகளை படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவர்கள் உதவித்தொகை பெற சென்னை -4 சாந்தோம் மாவட்ட வேலைவாயப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை அணுக வேண்டும்.

விண்ணப்பிப்பவர்களுக்கான தகுதி:

1. விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருத்தல் வேண்டும்.

2. விண்ணப்பதாரர் 40 வயதுக்குட்பட்டவராகவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

3. விண்ணப்பதாரர்கள் தனியார் நிறுவனங்களில் பணிபுரியாதவராவும், சுய வேலைவாய்ப்பில் ஈடுபடாமல் இருப்பவராகவும் இருத்தல் வேண்டும்.

4.குடும்ப ஆண்டு வருமானம் உச்ச வரம்பினை ரூ.50000-லிருந்து ரூ.72,000-ஆக கடந்த 25.07.2019 முதல் அரசாணை நிலை எண்.127-ன்படி உயர்த்தப்பட்டது. அதன்படி குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருப்பவராக இருத்தல் வேண்டும். (மாதம் ரூ.6,000)

மேற்கண்ட தகுதிகள் இருப்பவர்கள் மட்டுமே வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர் ஆவர். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்ப படிவத்தினை சென்னை-4, சாந்தோம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பெற்று விண்ணப்பிக்கலாம்.

ஏற்கனவே உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகளில் விண்ணப்பம் சமர்ப்பித்து ஓராண்டு முடிவு பெற்றவர்கள் சுய உறுதி மொழி ஆவணத்தை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண், உதவித்தொகை எண்.(MR.No.), வங்கி புத்தகம் நகல் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது”.

இவ்வாறு சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x