Published : 26 Sep 2019 02:36 PM
Last Updated : 26 Sep 2019 02:36 PM

பகவத் கீதை விவகாரம்: மத்திய அரசின் நிர்பந்தங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அடிபணிய வேண்டாம்; இரா.முத்தரசன்

சென்னை

மத்திய அரசின் நிர்பந்தங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அடிபணியக் கூடாது. பகவத் கீதை புகுத்தப்படுவது கைவிடப்பட வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் படிப்பில் பகவத் கீதை, தத்துவவியல் ஆகிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக இரா.முத்தரசன் இன்று (செப்.26) வெளியிட்ட அறிக்கையில், "மத்திய ஆட்சியில் அமர்ந்துள்ள பாஜக தனது சொந்த விருப்பங்களையும், எதிர் விளைவுகளை உருவாக்கும் கொள்கைகளையும், நாட்டு மக்களின் மீது திணித்துவிட பல்வேறு வகையில் நிர்பந்தங்களை மேற்கொண்டு வருகின்றது.

அதன் ஒரு பகுதியாகவே, அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்கள் பகவத் கீதை படித்திட வேண்டும் என்பதாகும். அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பரிந்துரையை ஏற்று அண்ணா பல்கலைக்கழகம் இத்தகைய பணியில் ஈடுபட்டுள்ளது.

காலம், காலமாக போற்றிப் பாதுகாக்கப்பட்டு வரும் மதச்சார்பின்மை என்ற உயரிய கொள்கையைச் சீர்குலைத்து, ஒரு நாடு, ஒரு மதம் என்ற வகுப்புவாத மதவெறியூட்டும் கொள்கையை அமல்படுத்தி, குறுகிய அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயல்களில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவது கண்டனத்திற்குரியது.

மத்திய அரசின் நிர்பந்தங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அடிபணியக் கூடாது, பகவத் கீதை புகுத்தப்படுவது கைவிடப்பட வேண்டும்," என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x