Published : 26 Sep 2019 10:16 AM
Last Updated : 26 Sep 2019 10:16 AM

தொழில் துறையை காப்பாத்துங்க... கதறும் குறுந்தொழில்முனைவோர் அமைப்பு

கோயம்புத்தூர், திருப்பூர் குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில்முனைவோர் சங்கத்தின் (காட்மா) பொதுக்குழு கூட்டம் கோவை கணபதியில் நடைபெற்றது.

இணைத் தலைவர் ஜே.மகேஷ்வரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், துணைத் தலைவர் கே.எஸ்.சங்கரநாராயணன் வரவேற்றார். சங்கத் தலைவர் எஸ்.ரவிக்குமார், முன்னாள் செயலர் என்.தனபால் மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. புதிய தலைவராக சி.சிவக்குமார், பொதுச் செயலராக ஜி.செல்வராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சங்க நிர்வாகிகளிடம் பேசினோம்.“அண்மையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஜாப் ஒர்க் அடிப்படையில் செயல்படும் நிறுவனங்களுக்கான வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடும் நெருக்கடியில் தவிக்கும் சிறு, குறுந்தொழில்முனைவோருக்கு உதவும் வகையில், ஜாப் ஒர்க் அடிப்படையில் செயல்படும் நிறுவனங்களுக்கு 5 சதவீதம் மட்டும் வரி விதிக்க வேண்டும்.

தொழில் மந்த நிலை காரணமாக, பல்வேறு தொழில்கள் நலிவுற்று இருப்பதால், மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட வங்கிப் பரிவர்த்தனை கட்டணக் குறைப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ரூ.25 லட்சம் வரை, குறைந்த வட்டியில், பிணையில்லா கடன் வழங்க வேண்டும். வங்கிக் கடனுக்காக வட்டியைக் குறைப்பதுடன், கடன்களை வசூலிப்பதில் கடுமை காட்டாமல், திருப்பிச் செலுத்த போதுமான காலஅவகாசம் வழங்க வேண்டும். அதேபோல, தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் தொழில் துறை நசிவை சரி செய்யும் வகையில், மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பொதுத் துறை நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் உதிரிபாகங்களில் 40 சதவீதத்தை சிறு, குறுந்தொழில்முனைவோரிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்ற உத்தரவை, முழுமையாக அமல்படுத்த வேண்டும். இதை உறுதிப்படுத்த கண்காணிப்புக் குழுவையும் அமைக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே, தொழில் துறையை நசிவிலிருந்து மீட்க முடியும்.

குறிப்பாக, லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் சிறு, குறுந்தொழில் துறையை பாதுகாக்க லாம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x