Published : 25 Sep 2019 05:20 PM
Last Updated : 25 Sep 2019 05:20 PM

பொறியியல் படிப்பில் பகவத் கீதை: மதச்சார்பின்மைக்கு எதிரானது; மார்க்சிஸ்ட் எதிர்ப்பு

பிரதிநிதித்துவப் படம்

புதுச்சேரி

பொறியியல் படிப்பில் பகவத் கீதை பாடம் மதச்சார்பின்மை கோட்பாட்டுக்கு எதிரானது எனவும், இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு-புதுச்சேரி மாநிலக்குழுக் கூட்டம் இரண்டாவது நாளாக இன்று (செப்.25) புதுச்சேரியில் நடைபெற்றது. கட்சியின் தமிழ் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், தமிழ் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

2-ம் நாள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

"அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத் கீதை மற்றும் தத்துவவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பரிந்துரையின்படி இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பில் பகவத் கீதை பாடம் என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மதச்சார்பின்மை கோட்பாட்டுக்கு எதிரானது. அனைத்து மத மாணவர்களும் படிக்கும் ஒரு படிப்பில் குறிப்பிட்ட மத போதனையை புகுத்துவதும், இதற்கு தமிழக அதிமுக அரசு துணைபோவதும் ஏற்கத்தக்கது அல்ல. இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

தேசிய கல்விக் கொள்கை - 2019 குறித்த வரைவறிக்கையினை மத்திய அரசு பொதுத்தளத்தில் கடந்த ஜூன் 1-ம் தேதி வெளியிட்டது. பொதுமக்களிடம் பெற்ற கருத்துகளைப் பரிசீலித்து வருவதாக மத்திய அரசு கூறி வரும் நிலையில், எஜமானனுக்கு மிஞ்சிய விசுவாசியாக, மத்திய அரசுக்கு முந்தியே, தேசிய கல்விக் கொள்கை - 2019 வரைவறிக்கை இறுதி செய்யப்படும் முன்னரே அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ள 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது இறுதித் தேர்வு, செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளை மூடும் பள்ளி வளாகத் திட்டம் ஆகியவற்றை தமிழகத்தில் அமல்படுத்தப்போவதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். பள்ளிக் கல்விச் சூழலைப் பாதிக்கும் பள்ளிக் கல்வித்துறையின் இந்த அறிவிப்புகளை தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிப்பதோடு தமிழக மாணவர்களின் நலன் கருதி அந்த அறிவிப்புகளை உடனடியாக திரும்பப் பெற தமிழக அரசினை வலியுறுத்துகிறது".

இவ்வாறு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செ.ஞானபிரகாஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x