Published : 25 Sep 2019 11:14 AM
Last Updated : 25 Sep 2019 11:14 AM

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸுடன் பாஜக மோத வேண்டும்: கட்சி தலைமையிடம் நிர்வாகிகள் வலியுறுத்தல்

அ. அருள்தாசன்

திருநெல்வேலி

நாங்குநேரி சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸை எதிர்த்து பாஜக களமிறங்க தொண்டர்கள் விரும்புகின்றனர். இது தொடர்பாக கட்சி தலைமையிடம் வற்புறுத்தி வருவதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டி யிடுகிறது. அக்கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டு உள்ளூர் மற்றும் வெளியூர் நிர்வாகிகள் பலரும் சென்னை, புதுடெல்லி யில் உள்ள கட்சி தலைவர்களை அணுகி வரு கிறார்கள். திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை யும் சில நிர்வாகிகள் சந்தித்து பேசிவருவதாக அக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பது தெரியவரும்.

காங்கிரஸை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வதற்காக விருப்ப மனுக்களை பெற்று, நேர்காணலையும் அக்கட்சி தலைவர்கள் நடத்தி முடித்துள்ளனர்.

பாஜக போட்டியிட விருப்பம்

இந்நிலையில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக வுக்கு நாங்குநேரி தொகுதியை ஒதுக்க வாய்ப் புள்ளதாக பரவலாக பேச்சு எழுந்துள்ளது. இதுதொடர்பாக பாஜக வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘‘பாஜக போட்டியிட வேண் டும் என்ற தொண்டர்களின் விருப்பம் குறித்து கட்சி தலைமையிடம் தெரிவித்துள்ளோம். முடிவு விரைவில் தெரியவரும்’’ என்றனர்.

இதனிடையே திருநெல்வேலியில் நேற்று மாலையில் நடைபெற்ற பாஜக நிர்வாகி கள் கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப் பட்டுள்ளது. மாவட்ட பாஜக தலைவர் தயாசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் பலரும் பாஜகவுக்கு நாங்குநேரியை ஒதுக்க கட்சி தலைமையிடம் வற்புறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பாஜக மாநில விவசாய அணி பொதுச்செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன் கூறியதாவது:

நாங்குநேரி தொகுதியில் போட்டியிட தொண்டர்கள் பலரும் விரும்புகின்றனர். இதை கட்சி தலைமைக்கு தெரிவிக்க வேண்டியது எங்களது கடமை. அகில இந்திய அளவில் ஆளுங்கட்சியாகவும், பெரிய கட்சியாகவும் இருக்கும் பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையேதான் பிரதான போட்டி உள்ளது.

தற்போது நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் நிலையில் அதை எதிர்த்து பாஜக போட்டியிட வேண்டும் என்று கட்சியினர் விரும்புகின்றனர்.

தமிழக சட்டப் பேரவையில் பாஜகவுக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலையை போக்க இத்தொகுதியில் பாஜக போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்’’ என்றார்.

கடந்த 2016 சட்டப் பேரவை தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிட்ட தேவநாதன் யாதவின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக கட்சி வேட்பாளர் 8 ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்தார். இத்தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் தேர்வு உள்ளிட்டவற்றை ஏற்கெனவே பாஜகவினர் முடித்துள்ளனர். அதே உற்சாகத்தில் இடைத்தேர்தல் களத்திலும் பணியாற்ற பாஜகவினர் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x