Published : 22 Sep 2019 08:32 AM
Last Updated : 22 Sep 2019 08:32 AM

பிரதமர் - சீன அதிபர் 2 நாள் பயணமாக மாமல்லபுரம் வருகை; தலைமைச் செயலர் - டிஜிபி நேரில் ஆய்வு: பாதுகாப்பு பணிகளை பலப்படுத்த உத்தரவு

மாமல்லபுரத்தில் இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையையொட்டி பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திய தலைமைச் செயலர் சண்முகம்.

மாமல்லபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத் துக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையையொட்டி தலைமைச் செயலர் சண்முகம் மற்றும் காவல் துறை தலைவர் திரிபாதி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று மாமல்லபுரத்தில் ஆய்வு செய்தனர். அவர்கள் கடற்கரை கோயில், வாகன நிறுத்தும் இடம் ஆகிய இடங்களில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.

பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் வரும் 11-ம் தேதி மாமல்லபுரம் வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் கோவளம் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் 2 நாட்கள் தங்கவுள்ளதாகவும், மாமல்லபுத்தில் உள்ள கலைச் சின்னங்களைப் பார்வையிட உள்ளதாகவும் தெரிய வருகிறது.

இந்நிலையில் பிரதமர் மற்றும் சீன அதிபர் வருகையையொட்டி தலைமைச் செயலர் சண்முகம், உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி, காவல்துறை தலைவர் திரிபாதி, மாவட்ட ஆட்சியர் பொன்னையா, மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண் ணன் உட்பட 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று மாமல்லபுரம் பகுதியில் ஆய்வு செய்தனர்.

மோடி மற்றும் ஜி ஜின்பிங ஆகியோர் பார்வையிடும் முக்கிய புராதன இடங்கள், அங்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், சாலை வசதி உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் ஆகியவை குறித்தும் அவர்கள் அதிகாரிகளுடன் விவாதித்தனர்.

மாமல்லபுரம் கடற்கரை கோயில், அர்ஜூனன் தபசு, வெண்ணெய் உருண்டைக் கல், ஐந்து ரதம் ஆகிய இடங்களுக்கும் சென்று அவர்கள் பார்வையிட்டனர்.

மாமல்லபுரம் கடற்கரை கோயிலின் உள் பகுதியில் இந்திய பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருப்பதால் அந்தப் பகுதியில் பாது காப்புப் பணிகளை பலப்படுத்தவும் உத்தரவிட்டனர்.

ஏற்கனவே சீன பாதுகாப்பு அதி காரிகள் வந்து ஆய்வு செய்து விட்டு சென்றுள்ள நிலையில் வரும் அக். 11-ம் தேதி திட்டமிட்டபடி இவர்கள் பயணம் இருக்கலாம் என்றும், பாதுகாப்பு பிரச்சினை களைக் கருத்தில் கொண்டு கடைசி நேரத்தில் சந்திப்பு தேதியில் ஏதேனும் மாற்றம் நிகழலாம் என்றும் கூறப்படுகிறது.

அதனால்தான் இன்னும் அதிகாரபூர்வமாக தேதி அறி விக்கப்படவில்லை என ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரி வித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x