Published : 21 Sep 2019 05:19 PM
Last Updated : 21 Sep 2019 05:19 PM

கார்கோவிலிருந்து புகை: கத்தார் நாட்டுக்குப் புறப்பட்ட 40 நிமிடங்களில் சென்னை திரும்பிய விமானம்

சென்னை,

கத்தார் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்ற விமானம் கார்கோவிலிருந்து புகை வருவதாக வந்த எச்சரிக்கையை அடுத்து புறப்பட்ட 40 நிமிடங்களிலேயே மீண்டும் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.

இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:

''இன்று 121 பயணிகளை ஏற்றிக்கொண்டு கத்தார் நாட்டின் தோஹா நகருக்குப் பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. இது இண்டிகோ விமான நிறுவனத்திற்குச் சொந்தமானது.

விமானம் சென்னையை விட்டுப் புறப்பட்டு சிறிது தூரம் சென்ற பிறகு விமானத்தில் உள்ள கார்கோ பகுதியிலிருந்து புகை வருவதாக எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. எச்சரிக்கைத் தகவலைப் பெற்ற விமானி உடனடியாக மீண்டும் சென்னையை நோக்கி விமானத்தைத் திருப்பியதாக இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எனினும் விமான நிலையத்தில் விமானத்தைத் தரை இறக்குவதற்கான அனுமதியை அவர் கோரினார். விமானப் போக்குவரத்து அதிகாரிகளின் அனுமதி பெற்றவுடன் அவர் விமானத்தை சென்னை விமான நிலையத்தில் தரை இறக்கினார். புறப்பட்ட 40 நிமிடங்களிலேயே விமானம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.

இதில், விமானி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக SOP எனப்படும் நிலையான இயக்க நடைமுறையைப் பின்பற்றி விமானத்தை ஆய்வுக்காக சென்னையில் தரையிறக்கினார். விமானத்தைப் பரிசோதித்த பொறியாளர்கள் விமானத்தில் எந்தவிதமான தொழில்நுட்பக் கோளாறுகளும் இல்லை என்று தெரிவித்தனர். எனினும் 121 பயணிகளும் வேறொரு விமானத்தில் மாற்றப்பட்டனர். அந்த விமானம் தோஹாவுக்குப் புறப்பட்டுச் சென்றது''.

இவ்வாறு விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x