Published : 20 Sep 2019 11:20 AM
Last Updated : 20 Sep 2019 11:20 AM

திருவட்டாறு கோயிலில் தங்க அங்கி கொள்ளை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு பின் 24 பேருக்கு சிறை- நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு

நாகர்கோவில்

குமரி மாவட்டம் திருவட்டாறு ஆதி கேசவ பெருமாள் கோயிலில் பெருமாள் சிலை மீது சார்த்தப் பட்டிருந்த சுமார் 8 கிலோ எடை யுள்ள தங்க அங்கி வெட்டி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத் தில் 24 பேருக்கு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் சுமார் 1,700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோயிலில் அனந்த சயன கோலத்தில் காட்சியருளும் பெருமாள் சிலை மீது சுமார் 12 கிலோ தங்க அங்கி பதிக்கப்பட்டிருந்தது. கடந்த 1974 முதல் 1984-ம் ஆண்டு வரை இச்சிலையிலிருந்து சுமார் 8 கிலோ தங்க அங்கி வெட்டி கொள்ளையடிக்கப்பட்டது. இது தெரியாமல் இருக்க இரும்பு தகடுகளை வெட்டி பொருத்தி, அதன் மேல் தங்க முலாம் பூசி மறைக்கப்பட்டது.

சிபிசிஐடி விசாரணை

இது தொடர்பாக திருவட்டாறு காவல் நிலையத்தில் கொள்ளை வழக்கு பதிவு செய்யப்பட்டது. 17-06-1992-ல் இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸுக்கு மாற்றப் பட்டது. இதுதொடர்பாக கோயில் ஊழியர்கள் மற்றும் உடந்தையாக செயல்பட்ட வெளி நபர்கள் 34 பேர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்து, 4 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது. மொத்தம் 151 சாட்சி களிடம் விசாரணை நடத்தப்பட்டது. 286 ஆவணங்கள் ஆய்வு செய்யப் பட்டன.

24 பேர் குற்றவாளிகள்

இந்த நிலையில் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பத்து பேர் இறந்து விட்டனர். 27 ஆண்டுகளாக நடைபெற்ற இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தங்க அங்கி கொள்ளையடிக்கப்பட்ட சம்ப வத்தில் பெண் உட்பட 24 பேர் குற்றவாளிகள் என நீதிபதி கிறிஸ் டியான் அறிவித்தார்.

இவர்களில் குற்றம் சாட்டப்பட்ட அய்யப்பன், கோபாலகிருஷ்ணன், கோபிநாதன், அப்புகுட்டன், கிருஷ்ணம்மாள், குமார், முத்துகுமார், முத்து நாயகம், சுப்பிரமணியரு, மகாராஜா பிள்ளை, கோபாலகிருஷ்ணன், சங்கர குற்றாலம், முருகப்பன், வேலப்பநாயர், முத்துகிருஷ்ண ஆசாரி ஆகிய 15 பேருக்கு தலா 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மீதமுள்ள 9 பேருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

மேலும், கோபிநாதன் என்பவருக்கு ரூ.3 லட்சத்து 70 ஆயிரமும், கோபாலகிருஷ்ணன் என்பவருக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரமும், மற்றவர்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வீதமும் அபராதம் விதிக்கப்பட்டது. அரசு தரப்பில் வழக்கறிஞர் யாசர் முபாரக் ஆஜரானார்.

பெரும் பரபரப்பை ஏற் படுத்திய இந்த வழக்கின் தீர்ப்பை அறிவதற்காக நேற்று நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஏராளமானோர் குவிந்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x