

சென்னை
வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின் மூலம் முதலீடுகள் ஈர்க்கப்பட்டதை உறுதி செய்யவும், உரிய அனுமதிகளை வழங்கவும் முதல்வர் தலைமையில் உயர்நிலை அதிகாரக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சுகாதாரம், பால்வளம், போக்குவரத்து, எரிசக்தி, தகவல் தொழில் நுட்பம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் புதிய தொழில் நுட்பங்களை அறிந்து, அவற்றை தமிழகத்தில் செயல் படுத்தவும் அந்த நாடுகளின் தொழிலதிபர்களை தமிழகத்தில் முதலீடு செய்ய அழைக்கவும் முதல்வர் பழனிசாமி அந்த நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் மூலம் ஈர்க்கப்பட்ட முதலீடுகளை உறுதி செய்ய முதல்வர் தலைமையில் உயர்நிலை அதிகாரக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
முதல்வர் பழனிசாமி தலைமையில் உயர் நிலைக்குழு இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு ஈர்ப்பதற்காக கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் செப்டம்பர் 9-ம் தேதி வரை பயணம் மேற்கொண்டது. இப்பயணத்தின்போது ரூ.8 ஆயிரத்து 835 கோடிக்கு முதலீடுகள் செய்து 35 ஆயிரத்து 520 நபர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கக் கூடிய வகையில் 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத் திடப்பட்டன. அம்முதலீடுகளை உறுதி செய்யும் பொருட்டு, முதலீட்டு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் அனுமதிகள் வழங்குதலை துரிதப்படுத்த முதல்வர் பழனிசாமி தலைமையிலான உயர் நிலை அதிகாரக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அக்குழுவில் துணை முதலமைச்சர், மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை, நகராட்சி நிர்வாகம், தொழில், சுற்றுச்சூழல், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் தொடர்புடைய துறைகளின் செயலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தொழில் துறை முதன்மைச் செயலர் இக்குழுவில் உறுப்பினர் செயலாளராக செயல்படுவார். முதலீடுகளுக்கான வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் ஒற்றைச் சாளர முறையில் பெறப்பட்டு நிலுவையில் உள்ள அனுமதிகள் மற்றும் மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு குழுமத்தால் வழங்கப்படும் சுற்றுச்சூழல் அனுமதி போன்ற பிற அனுமதிகளை துரிதப்படுத்துவதற்காக பிரதி மாதம் முதல் வாரத்தில் இக்குழு கூடி உரிய தீர்வு காணும்.
மேலும், பெரும் முதலீட்டாளர்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்வதற்காகவும், தொழில் முதலீடுகளை துரிதப்படுத்துவதற்காகவும் ஐஏஎஸ் நிலையில் ஒரு அலுவலரை சிறப்புப்பணி அலுவலராகக் கொண்டு “முதலீடுகளை எளிதாக்கும் பிரிவு” ஒன்று முதல்வர் அலுவலகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.