Published : 17 Sep 2019 02:44 PM
Last Updated : 17 Sep 2019 02:44 PM

இந்தி எல்லோரும் பேசக்கூடிய மொழி அல்ல: கே.எஸ்.அழகிரி கருத்து

சென்னை

இந்தி எல்லோரும் பேசக்கூடிய மொழி அல்ல என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை, ஆவடியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கே.எஸ்.அழகிரி, ''ரிசர்வ் வங்கியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தால் ரூ.1.76 லட்சம் கோடி உபரி நிதி சேமிக்கப்பட்டது. இந்த நிதியை பாஜக அரசு வீணடித்துவருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் இந்தியா விரைவில் திவாலாகும்.

மத்திய அமைச்சர் அமித் ஷாவின் ஒரே நாடு - ஒரே மொழி என்ற கருத்து கண்டிக்கத்தக்கது. இது தவறான வாதம். இந்தியா என்பது ஒரே நாடு - ஒரே மொழியைக் கொண்டதல்ல.

இந்தியா ஒரே தேசம். அதை நாங்கள் ஏற்றுக்கொண்டுதான் இந்தியாவைத் தூக்கிப் பிடிக்கிறோம். இதை நீங்கள் சொல்லிக்கொண்டே ஒரே மொழி, ஒரே தேசம் என்று எப்படி உங்களால் கூறமுடிந்தது?

இந்தி பரவலாக அதிகம் பேசக்கூடிய மொழியாக இருக்கலாமே ஒழிய, எல்லோரும் பேசக்கூடிய மொழி இந்தி அல்ல. ஏராளமான மொழிகளைப் பேசக் கூடியவர்கள் இந்த நாட்டில் இருக்கின்றனர். எனவே மொழிப் பிரச்சினையை நீங்கள் கொண்டு வரக்கூடாது, அது தவறான வாதம்'' என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள இந்தி பேசும் மக்களால் செப்டம்பர் 14-ம் தேதி இந்தி நாள் கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்ட பாஜக தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, "நாட்டில் உள்ள அனைவரையும் ஒரு மொழியால் ஒருங்கிணைக்க முடியும் என்றால் அது அதிகமான மக்களால் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும்" எனத் தெரிவித்திருந்தார்.

இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x