Published : 16 Sep 2019 08:31 AM
Last Updated : 16 Sep 2019 08:31 AM

ஈஷா அறக்கட்டளையின் ‘காவிரி கூக்குரல்’ இயக்கத்தின் கீழ் 242 கோடி மரக்கன்று நடும் திட்டத்துக்கு அரசு துணை நிற்கும்: முதல்வர் கே.பழனிசாமி உறுதி

சென்னை

ஈஷா அறக்கட்டளையின் ‘காவிரி கூக்குரல்’ இயக்கத்தின் கீழ் 242 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்துக்கு அரசு துணை நிற்கும் என்று முதல்வர் கே.பழனிசாமி உறுதியளித்தார்.

காவிரி நதிக்கு புத்துயிரூட்டவும், மண் வளத்தை அதிகரித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் ‘காவிரி கூக்குரல்’ என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தொடங்கியுள்ளார். இந்த இயக்கத்தில் மாநில அரசுகள், விவசாயிகள் மற்றும் பொது மக்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக கர்நாடக மாநிலம் தலகாவேரியில் கடந்த 3-ம் தேதி மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்கினார். அவர் மைசூர், பெங்களூரு, ஓசூர், தர்மபுரி, ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுச்சேரி உள்ளிட்ட நகரங்களின் வழியாக நேற்று சென்னை வந்தடைந்தார்.

இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக சென்னை பல்கலைக்கழகத்தில் ஒரு பொது நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி.ரெட்டி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், நடிகை சுஹாசினி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசியதாவது:

காவிரி ஆறு நமது உயிருக்கு மூலம். 120 துணை நதிகள் சேர்ந்து தான் காவிரி ஆறு ஓடுகிறது. அந்த 120 நதிகளில் இப்போது வெறும் 35 நதிகள் தான் 9 முதல் 12 மாதங்கள் ஓடுகின்றன. மற்றவை எல்லாம் வறண்டு விட்டன. காவிரியை மீட்பது என்றால் ஒரு நதியை மீட்பது அல்ல. அதன் அருகில் இருக்கும் 85 ஆயிரம் சதுர கி.மீ பரப்பு உள்ள காவிரி நதி படுகை முழுவதையும் மீட்பது ஆகும். கர்நாடக, புதுச்சேரி முதல்வர்கள் மர விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளனர். அதேபோல், தமிழக அரசு மர விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்.

காவிரி நதிப்படுகையில் 242 கோடி மரக்கன்றுகளை நட்டு வளர்த்தால் 9 முதல் 12 டிரில்லியன் லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும். உலகில் உள்ள எல்லா ஆறுகளில் உள்ள நீரை காட்டிலும் 8 மடங்கு நீரை மண்ணில் பிடித்து வைத்துகொள்ள முடியும். நாட்டில் உள்ள 80 சதவீத நிலங்கள் விவசாயிகளிடம் தான் உள்ளன. விவசாயிகள் மரம் வளர்த்தால் தான் தேசத்துக்கு பயன் விளையும்.

இவ்வாறு சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசினார்.

முதல்வர் கே.பழனிசாமி பேசும் போது கூறியதாவது: காவிரி ஆற்றுப்படுகைகளில் மண்ணரிப்பைத் தடுக்கவும், பசுமைப் போர்வையை அதிகரிக்கவும், தேக்குமரம் நடும் திட்டத்தின் கீழ் கடந்த 2 ஆண்டுகளில் 2.40 லட்சம் தேக்கு மரக்கன்றுகளும், வேளாண் காடுகள் திட்டத்தின் கீழ் 9 லட்சம் மரக்கன்றுகளும், மண் அரிப்பை தடுக்கவும், ஈரத் தன்மையை பாதுகாக்கவும், பனை மரங்களை நடுதல் மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு 2 லட்சம் பனை விதைகளும் இதுவரை தமிழ்நாட்டில் நடப்பட்டுள்ளன.

காவிரி ஆற்றின் பல்லுயிர் காத்தல், காவிரி மற்றும் அதன் துணை நதிகளில் மாசுகளை அகற்றுதல், காவிரி நகர்ப்புற கழிவு நீரை சுத்திகரிக்க தேவையான சுத்திகரிப்பு ஆலைகளை நிறுவுதல், ஆற்றுப்படுகையில் மரங்களை நட்டு காடுகளை வளர்த்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள ‘நடந்தாய் வாழி காவேரி’ என்ற திட்டத்தைச் செயல்படுத்த பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன். இந்த திட்டத்தைப் பாராட்டி, இதேபோல் நாட்டிலுள்ள ஜீவநதிகளில் செயல்படுத்த குடியரசுத் தலைவர் நாடாளுமன்ற உரையில் குறிப்பிட்டுள்ளார்.

காவிரியைப் பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில், சத்குரு ‘காவிரி கூக்குரல்’ இயக்கத்தை தொடங்கியிருப்பது பெருமை அளிக்கிறது. இந்த இயக்கத்தின் வாயிலாக 242 கோடி மரங்கன்றுகளை நடுவதற்குத் திட்டம் தீட்டியுள்ளனர். இது வரவேற்கத்தக்கது. இந்தியாவிலேயே அதிக மரக்கன்றுகளை நடுகிறவர் சத்குருதான். 242 கோடி மரக்கன்றுகள் நடுவதற்கு சத்குரு எடுக்கும் முயற்சிக்கு தமிழக அரசு துணை நிற்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “காவிரி படுகையில் 242 கோடி மரங்கள் நடுவது என்ற இலக்கை நிர்ணயித்து அதைப் படிப்படியாக செயலாக்கி வரும் சத்குருவின் பணி பாராட்டுக்குரியது. நான் இந்த நிகழ்ச்சிக்கு காரில் வருகின்ற பொழுது சத்குரு என்னுடைய காரை ஓவர் டேக் செய்து பைக்கில் வேகமாக சென்றுக் கொண்டிருந்தார். அப்போது தான் அந்த இடத்தில் பைக்கில் அவரை பார்த்தது போல் இருந்தது. ஆனால், கண் இமைக்கின்ற நேரத்தில் அவர் சிட்டாய் பறந்துவிட்டார், இவ்வளவு வயதிலும், 16 வயது இஞைரைப் போல சூப்பர் பாஸ்ட் வேகத்தில் சென்று விட்டார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x