Published : 14 Sep 2019 01:05 PM
Last Updated : 14 Sep 2019 01:05 PM

இந்தித் திணிப்புக்கு எதிரான கடுமையான பிரச்சாரத்தை மக்களிடத்தில் கொண்டு செல்வோம்: வைகோ

சென்னை

இந்தித் திணிப்புக்கு எதிரான கடுமையான பிரச்சாரத்தை மக்களிடத்தில் கொண்டு செல்வோம் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இந்தி மொழி அதிகாரப்பூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட்டதையடுத்து, நாடு முழுவதும் உள்ள இந்தி பேசும் மக்களால் செப்டம்பர் 14-ம் தேதியான இன்று இந்தி நாள் கொண்டாடப்படுகிறது.

இந்தி நாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி பாஜக தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா ட்விட்டரில் இந்தியில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், " இந்தியா பல்வேறுவிதமான மொழிகளைக் கொண்டது. ஒவ்வொரு மொழிக்கும் தனக்கே சொந்த முக்கியத்துவம் இருக்கிறது. ஆனால், இந்த உலகில் இந்தியாவின் அடையாளமாக ஒருமொழிதான் இருக்க வேண்டும் என்பது முக்கியம். இன்றுள்ள நிலையில், நாட்டில் உள்ள அனைவரையும் ஒரு மொழியால் ஒருங்கிணைக்க முடியும் என்றால் அது அதிகமான மக்களால் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும்.

அமித்ஷா: கோப்புப்படம்

இன்று, இந்தி தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டில் உள்ள அனைத்து மக்களிடம் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால், நம்முடைய தாய்மொழியை பயன்படுத்துவதை அதிகமாக்க வேண்டும், ஒருமொழியான இந்தியால் மட்டும்தான், மகாத்மா காந்தி, இரும்பு மனிதர் சர்தார் வல்லவாய் படேலின் கனவை நிறைவேற்ற முடியும். அனைவருக்கும் இந்தி தின வாழ்த்துக்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அமித்ஷாவின் இந்த கருத்துக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது, "கர்நாடகா, பஞ்சாப், மகாராஷ்டிரா, காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் இந்தி எதிர்ப்பு உருவாகியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஆங்கிலம் ஆட்சி மொழி. ஆங்கிலோ இந்தியர்கள் இந்திய குடிமக்கள். அவர்களின் தாய்மொழி ஆங்கிலம். ஆங்கிலம் ஒன்றும் அந்நிய மொழி அல்ல. அவர்களுக்கு ஆங்கில அந்நிய மொழி என்றால், எனக்கு இந்தி அந்நிய மொழி. இரண்டு பேரும் சமமாக சிரமங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றால், ஆங்கிலம் மட்டும் இருக்க வேண்டும். இது அண்ணாவின் கொள்கை. இதற்கு எதிரான கடுமையான பிரச்சாரத்தை மக்களிடத்தில் கொண்டு செல்வோம்.

திராவிட இயக்கக் கொள்கையைப் பற்றி பேசவோ, இந்தி ஆதிக்க எதிர்ப்பைப் பற்றி பேசவோ அரிச்சுவடி கூட அறியாத ஒரு மனிதர் தமிழக முதல்வராக இருக்கிறார். நான் அதற்காக வருந்துகிறேன். தமிழ்நாட்டுக்கு இப்படியொரு சாபக்கேடா? அண்ணா முதல்வராக இருந்த இடத்திலா? இந்தி கூடாது என்று விரட்டிய இடத்திலா? இப்படியொரு முதல்வர் இருக்கிறார். இது நாட்டின் சாபக்கேடு," என வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x