Published : 13 Sep 2019 03:27 PM
Last Updated : 13 Sep 2019 03:27 PM

சுபஸ்ரீ மரணம்: பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்களை வைக்கக் கூடாது; தொண்டர்களுக்கு கட்சித் தலைவர்கள் வேண்டுகோள்

சென்னை

சுபஸ்ரீயின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், தங்கள் கட்சியினர் இனி பேனர்களை அனுமதியின்றி வைக்கக் கூடாது எனவும், அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சென்னை, கோவிலம்பாக்கம் திருமண மண்டபத்தில் நடந்த அதிமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவுக்கு வரும் அதிமுக பிரமுகர்களை வரவேற்க நேற்று துரைப்பாக்கம், வேளச்சேரி 200 அடி ரேடியல் சாலையின் இருபுறமும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. சாலைத் தடுப்புகளிலும் வரிசையாக பேனர்கள் கட்டப்பட்டிருந்தன.

இதில் ஒரு பேனர், சாலையில் சென்ற குரோம்பேட்டையைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் சுபஸ்ரீ மீது விழுந்தது. பேனர் விழுந்ததால் நிலை தடுமாறிய சுபஸ்ரீ சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது ஏறியதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்திற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர், கட்சி நிகழ்ச்சிகள், தொண்டர்களின் இல்ல நிகழ்ச்சிகளில் பேனர்கள் வைக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.

பிற கட்சித் தலைவர்களும் இதனை வலியுறுத்தி வருகின்றனர்.

ராமதாஸ், நிறுவனர், பாமக:

பாமகவின் நிகழ்ச்சிகளுக்கு பதாகைகள் (பேனர்கள்), கட்அவுட்களை வைக்கக் கூடாது என்ற எனது ஆணை இன்றும், என்றும் பாமக நிர்வாகிகளால் கடைபிடிக்கப்பட வேண்டும். இந்த விதியை மீறுவது குறித்து பாமகவினர் நினைத்துக் கூட பார்க்கக் கூடாது.

டிடிவி தினகரன், பொதுச் செயலாளர், அமமுக:

விளம்பரப் பதாகையால் பலியான இளம்பெண் சுபஸ்ரீக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இளம்பெண்ணின் இறப்புக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அமமுக தொண்டர்கள், நிர்வாகிகள் கட்சி நிகழ்ச்சிகள் எதற்கும் சாலை மையத்திலும், நடைபாதை ஓரத்திலும், பதாகைகள் வைக்க வேண்டாம்.

இரா.முத்தரசன், மாநில செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி:

சுபாஸ்ரீயின் மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன் அவரது இழப்பிற்கு உரிய இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும்.

கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி:

ஆளுங்கட்சியினரின் இந்த அராஜக நடவடிக்கையையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் கண்டிக்கிறோம்.பொதுமக்களுக்கு இடையூறாகவும், விதிமுறைகளை மீறியும் பேனர், கட்அவுட் வைக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில் தலைவர்கள் பிறந்த தினம், பாராட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளை பொதுவாக நடத்துவதில்லை. அதே போல திருமண நிகழ்ச்சிகளின் போதும் விதிமுறைகளை மீறி கட்அவுட், பேனர்கள் போன்றவற்றை எப்போதும் வைப்பதில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.

ஜி.கே.வாசன், தலைவர், தமாகா:

தமாகாவினர் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும் வகையில் சாலைகளிலும், வீதிகளிலும், பொது இடங்களிலும் விளம்பரங்கள் செய்யக்கூடாது. விதிகளுக்கு உட்பட்டு விளம்பரங்கள் செய்ய வேண்டும். இயக்கம் சம்பந்தப்பட்ட, இல்லம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் எதுவாக இருப்பினும் அது தொடர்பான செய்தியை வெளியிடவோ, விளம்பரம் செய்யவோ விரும்பினால் சட்டவிதிகளுக்கு உட்பட்டு போஸ்டர்கள், பேனர்கள், கட் அவுட்டுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி:

விதிகளை மீறி சாலையின் நடுவே பதாகை வைத்து தங்கை சுபஸ்ரீயின் உயிரைப் பறித்தவர்களையும், அதற்குத் துணைபோன அதிகாரிகளையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும். சுபஸ்ரீயின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு இடையூறாக எக்காலத்திலும் இனி பதாகைகளை சாலைகளில் வைக்க மாட்டோம் என்று உறுதியேற்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x