Published : 12 Sep 2019 10:20 AM
Last Updated : 12 Sep 2019 10:20 AM

திமுக அறிவித்த குளம் தூர் வாரும் பணி: முந்திக் கொண்டு தொடங்கிய அதிகாரிகள்

கரூர்

திமுக இளைஞரணி சார்பில் கரூர் மாவட்டம் நெடுங்கூர் குளம் தூர் வாரப்படும் என அறிவித்திருந்த நிலையில், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் முந்திக் கொண்டு முதல் நாள் இரவே குளம் தூர் வாரும் பணியை தொடங்கினர்.

கரூர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் நெடுங்கூர் குளம், கஞ்சமனூர் குளம், சுக்காம்பட்டி ஓடை ஆகியவை தூர் வாரப்படும் என நேற்று முன்தினம் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் அவசர அவசரமாக நெடுங்கூர் குளம் தூர் வாரும் பணியை நேற்று முன்தினம் இரவே தொடங்கியது. தொடர்ந்து நேற்றும் பணி நடைபெற்றது.

நெடுங்கூர் குளம் தூர் வாரும் பணிக்காக திமுகவினர் வருவார்கள் என்பதால், அப்பகுதியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் திமுக இளைஞரணி துணைச் செயலாளர் எம்எல்ஏ மகேஷ் பொய்யாமொழி, கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் எம்எல்ஏ வி.செந்தில்பாலாஜி உள் ளிட்ட திமுகவினர் அங்கு வந்து, பொக்லைன் மூலம் தூர் வாரும் பணியை தொடங்கி வைத்தனர்.

அப்போது மகேஷ் பொய்யா மொழி கூறும்போது, ‘‘இந்த குளத்தை தூர் வாருவது குறித்து திமுக அறிவிப்பு வெளியிட்டவுடன், அரசு சார்பில் தூர் வாரும் பணியை தொடங்கியுள்ளது மகிழ்ச்சி யளிக்கிறது’’ என்றார். பணியை தொடங்கி வைத்த பின் திமுகவினர் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

அதன்பின் அங்கு வந்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், உரிய அனுமதி இல்லாமல் தூர் வாரினால் நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக சார்பில் தூர் வாரும் பொக்லைன் இயந்திர ஓட்டுநரை எச்சரித்தனர். இதையடுத்து, அவர் தூர் வாரும் பணியை கைவிட்டு அங்கிருந்து பொக்லைனுடன் சென்றுவிட்டார்.

பின்னர், அங்கு வந்த மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், நெடுங்கூர் குளம் தூர் வாரும் பணியை பார்வையிட்டு செய்தியாளர்களிடம் கூறியது: கரூர் மாவட்டத்தில் ரூ.7 கோடியில் 434 குளங்கள் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே டெண்டர் விடப்பட்ட குளங்களில், பெயர் வாங்குவதற்காக தூர் வாரும் பணியை திமுகவினர் அறிவித்தனர் என்றார்.

காரை மறிக்க முயற்சி

நெடுங்கூர் குளத்துக்கு சென்று விட்டு செந்தில்பாலாஜி காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, வழியில் சில பெண்கள் கையில், ‘3 சென்ட் நிலம் எங்கே?’ என்ற வாசகம் எழுதப்பட்ட அட்டைக ளுடன் அவரது காரை மறிக்க முயன்றனர். எஸ்.பி பாண்டியராஜன் அவர்களை தடுத்து திமுகவினரின் கார்களை அனுப்பி வைத்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து, கஞ்சமனூர் குளம், சுக்காம்பட்டி ஓடை தூர் வாரும் பணியை மகேஷ் பொய்யாமொழி, செந்தில்பாலாஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x