Published : 12 Sep 2019 06:56 AM
Last Updated : 12 Sep 2019 06:56 AM

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறுவயதில் தான் படித்த அரசு பள்ளியின் வளர்ச்சிக்கு உதவிய ‘இஸ்ரோ’ சிவன்- தரம் உயர்த்தப்பட்டதால் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

எல்.மோகன்

நாகர்கோவில்

இஸ்ரோ தலைவர் சிவன், சிறுவயதில் தான் படித்த அரசு தொடக்கப் பள்ளியின் வளர்ச்சிக்கு உதவியுள்ளார். இதன்மூலம் அப்பள்ளி கன்னியாகுமரி மாவட் டத்தின் முன்மாதிரி பள்ளியாக மாறி யுள்ளது.

சந்திரயான்-2 விண்கலம் நில வில் தரையிறங்கிய நேரத்தில் தகவல் தொடர்பு துண்டிக்கப் பட்டதால், இயல்பான உணர்வு களை கட்டுப்படுத்த முடியாமல் பிரதமர் முன்னிலையில், இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர்விட்ட போது, ஒட்டுமொத்த இந்தியர்களின் பார்வையும் அவர் மீது விழுந்தது. சமூக வலைதளங்களில் லட்சக் கணக்கானோர் அவருக்கு ஆறுதல் கூறினர்.

ஏழ்மையான விவசாயக் குடும் பத்தில் இருந்து சுயமுயற்சியாலும், கடின உழைப்பாலும் இஸ்ரோ தலைவராக உயர்ந்தவர் சிவன். தனது சொந்த கிராமமான கன்னியா குமரி மாவட்டம் சரக்கல்விளைக்கு வந்தால், வயல்வெளிக்குச் சென்று தனது நண்பர்களிடம் நலம் விசாரிப் பது, ஊருக்கு வந்தால் தனது பூர்வீக வீட்டிலேயே தங்குவது அவரது வழக்கம்.

இந்நிலையில், சரக்கல்விளை யில் தான் படித்த அரசு தொடக்கப் பள்ளியின் ஓட்டுக் கூரை உடைந் திருப்பதும், 15 குழந்தைகள் மட் டுமே அங்கு பயில்வதும், விரைவில் மூடப்படும் பட்டியலில் அந்த பள்ளி இருப்பதும் அவருக்கு தெரிய வந்தது. இதையடுத்து, தனியார் பள்ளிகளுக்கு நிகராக அப் பள்ளிக்கு அனைத்து வசதிகளை யும் செய்துகொடுக்க திட்டமிட்ட அவர், இஸ்ரோவின் வணிகப் பிரி வான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷ னிடம் பரிந்துரை செய்தார்.

ஸ்மார்ட் வகுப்புகள்

இதை ஏற்று, இஸ்ரோ அனுமதி வழங்கியது. முதல்கட்டமாக ரூ.40 லட்சம் மதிப்பில் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு, ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட்டன. பள்ளி வளாகத்தில் கலையரங்கம், அறிவியல் உபகரணங்கள் வாங்கப் பட்டன. மூடப்படும் நிலையில் இருந்த அந்தப் பள்ளி, ஓராண்டுக் குள்ளாகவே குமரி மாவட்ட அரசு தொடக்கப் பள்ளிகளில் முன்மாதிரி பள்ளியாக மாறியது.

இதுகுறித்து, சிவனின் பள்ளித் தோழர் மதன்குமார் கூறியதாவது: இஸ்ரோ தலைவர் சிவனின் முயற்சியால் இப்பள்ளி தரமிக்க பள்ளியாக உயர்ந்துள்ளது. ஓராண் டில் 69 குழந்தைகள் சேர்ந்துள்ளனர். இஸ்ரோ தலைவர் படித்த பள்ளி என்ற பெருமை இருப்பதால், பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்கள் குழந்தைகளை ஆர்வமுடன் இங்கு சேர்த்து வருகின்றனர்.

நிலவில் சந்திரயான்-2 தரை யிறங்கும் நிகழ்வைக் காண சரக் கல்விளை ஊர்மக்கள் அனை வரும் தொலைக்காட்சி முன்பு அமர்ந்திருந்தோம். தகவல் தொடர்பு துண்டித்ததை நினைத்து அவர் கண்கலங்கியபோது எங்கள் கிரா மமே அழுதது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x