Published : 10 Sep 2019 10:58 AM
Last Updated : 10 Sep 2019 10:58 AM

41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்; பல்லாயிரக்கணக்கில் வேலைவாய்ப்புகள்; வெற்றிகரமான பயணம்- முதல்வர் பழனிசாமி

சென்னை

வெளிநாட்டு சுற்றுப்பயணம் மூலமாக 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று (செப்.10) வெளியிட்ட அறிக்கையில், "வெளிநாடுகளில் உள்ள நகர உட்கட்டமைப்பு மற்றும் நவீன தொழில்நுட்பங்களை அறிந்து, அவற்றை தமிழ்நாட்டில் செயல்படுத்திடவும், வெளிநாடுவாழ் தமிழர்கள் மற்றும் பிற முதலீட்டாளர்களிடமிருந்து தமிழ்நாட்டுக்கு அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்திடவும், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு 28.8.2019 முதல் 10.9.2019 வரை அரசு முறைப் பயணம் மேற்கொண்டேன்.

அதன்படி, இங்கிலாந்து நாட்டில் சஃபோல்க் நகரத்தில் என்ஜென் நிறுவனம் , மரபு சாரா எரிசக்தியான சூரிய எரிசக்தி, காற்றாலை எரிசக்தி ஆகியவற்றை மின்கட்டமைப்புடன் இணைக்கும் வழிமுறைகளை நான் பார்வையிட்டேன். மேலும், டெங்கு, மலேரியா போன்ற நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களைக் கட்டுப்படுத்துதல், அந்நோய்களைக் கையாளும் வழிமுறைகள் தொடர்பாக லண்டன் ஸ்கூல் ஆப் ஹைஜீன் மற்றும் டிராபிகல் மெடிசன் நிறுவனத்துடன் நோக்க அறிக்கை கையெழுத்தானது. அத்துடன், லண்டன் ஆம்புலன்ஸ் சேவையின் செயல்பாடுகளைப் பார்வையிட்டு, அந்நிறுவனம் பின்பற்றும் நுட்பமான வழிமுறைகளை தமிழ்நாட்டிலுள்ள 108 ஆம்புலன்ஸ் ஊர்திகளில் நடைமுறைப்படுத்த உள்ளோம்.

29.8.2019 அன்று லண்டனில் உள்ள இங்கிலாந்து நாடாளுமன்றக் கூட்ட அரங்கில், இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், தமிழ்நாட்டில் முதலீடு செய்யவுள்ள சாத்தியக்கூறுகளைப் பற்றி எடுத்துக்கூறி, அதனால் முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் நன்மை பற்றியும் எடுத்துக்கூறி, தமிழ்நாட்டில் அதிக முதலீடு செய்யக் கோரிக்கை விடுத்தேன்.

3.9.2019 அன்று நியூயார்க் நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் ரூபாய் 2,780 கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிடப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதன்மூலம், தமிழ்நாட்டில் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். மேலும், ஹல்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம், நாஃப்தா கிராக்கர் யூனிட் உடன் கூடிய உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க என்னைச் சந்தித்து ஆலோசனை செய்தனர்.

சான் ஹீசே நகரில் 4.9.2019 அன்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில், சுமார் 2,300 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதன்மூலம் 6,500-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மேலும், தமிழ்நாட்டில் உள்ள தொழில் முனைவோருக்குத் தேவையான உதவிகள் அளிக்க அமெரிக்க தொழில் முனைவோர் அமைப்பின் உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ள டிஜிட்டல் ஆக்ஸிலரேட்டர் திட்டத்தைத் தொடங்கி வைத்தேன். இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டு தொழில் முனைவோருக்கு அவர்கள் தொடங்கும் புதுத்தொழிலுக்குத் தேவையான நிதியில் 10 சதவீதத்தை தமிழ்நாடு அரசு வழங்கும். இதற்காக 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

6.9.2019 அன்று லாஸ் ஏஞ்சலஸ், அனெஹெம் நகர மேயர் சித்து என்னை வரவேற்று அந்நகரில் அமைந்துள்ள கழிவுநீரை மறுசுழற்சி செய்து குடிநீராக்கும் மையத்தைக் காண்பித்தார். கழிவுநீர் சுத்திகரிப்பில், சிறந்த தொழில்நுட்பத்தை இங்கு பயன்படுத்தி வருகிறார்கள். சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை மறுசுழற்சி செய்து, கழிப்பறை, தோட்டங்கள், மரங்களுக்கு நீர் பாசனம் செய்யவும், ஏரிகளில் தேக்கி நிலத்தடி நீரை செறிவூட்டி, அந்த நிலத்தடி நீரை குடிநீருக்குப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தையும் கண்டறிந்தேன்.

இதுபோன்று, கழிவு நீரைச் சுத்திகரித்து, மறுசுழற்சி செய்தால், சென்னை மற்றும் இதர மாநகராட்சிகளில் நன்னீர் தேவை குறைவதுடன், சுற்றுச்சூழல் மாசுபடுவது தவிர்க்கப்படும் என்பதால், சோதனை அடிப்படையில் ஒரு மாதிரி சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க, மேயர் சித்து அனைத்து உதவிகளையும் செய்ய முன்வந்துள்ளார். இதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் கழிவு நீரைச் சுத்திகரித்து நன்னீராக்கும் ஒரு மாதிரி அலகை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

அமெரிக்க சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு, 9.9.2019 அன்று துபாய் நாட்டுக்கு சென்று, ஐக்கிய அரபு அமீரக அரசின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறையின் கீழ் இயங்கும் 'பிசினஸ் லீடர்ஸ் ஃபோரம்' என்ற அமைப்பும், இந்திய துணைத் தூதரகமும் இணைந்து நடத்திய துபாய் தொழில் முனைவோர் ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டேன். இந்தக் கூட்டத்தில், 3,750 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிட 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதன்மூலம் 10,800க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

அதனைத் தொடர்ந்து, துபாயில் உள்ள தொழில் முனைவோர்களோடு நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாட்டில் அதிக அளவில் தொழில் தொடங்கிட அழைப்பு விடுத்தேன். இந்த வெளிநாட்டு பயணத்தின் மூலமாக நான் நேரடியாகக் கண்டறிந்த பல திட்டங்களையும், தொழில்நுட்பங்களையும், கிராமங்கள் மற்றும் நகரங்களின் கட்டமைப்புகளையும் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவதன் மூலமாக தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தொடர்ந்து திகழச் செய்ய, இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

இந்தச் சுற்றுப் பயணம் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் அமைய உதவிகரமாக இருந்த வெளிநாடு வாழ் தமிழ் சொந்தங்கள், பிற தொழில் அமைப்புகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வெளிநாடு வாழ் தன்னார்வலர்கள், இந்தியத் தூதரக அதிகாரிகள், ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசுமுறைப் பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்குச் சென்று, அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களைச் சந்தித்து, மொத்தம் 8,835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்து, 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டதன் மூலமாக 35,520-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட தொழில் நிறுவனங்களுக்கு தொழில்கள் தொடங்குவதற்கு உண்டான அனைத்து உதவிகளையும் எனது அரசு விரைந்து செய்து கொடுக்கும்.

இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளில் சுற்றுலாவிற்கு முன்னுரிமை அளிக்கின்றனர். அந்த வழியில் தமிழக அரசும், சுற்றுலாவுக்கு மேலும் அதிக முக்கியத்துவம் கொடுத்து, தமிழ்நாட்டில் சுற்றுலாவிற்கு உகந்த சிறந்த மையங்களை உருவாக்க நடவடிக்கைகளை எடுக்கும். மேலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள், குறிப்பாக தமிழ் இளைஞர்கள், தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டி வருவதையும் கண்டறிந்தேன்.

வெளிநாட்டு முதலீடுகளைத் தொடர்ந்து ஈர்க்கத் தேவையான அனைத்து உதவிகளையும் முன் நின்று செய்யும் அமைப்புகளையும், ஒற்றைச் சாளர முறையையும் மேலும் வலுப்படுத்தி, அதிக முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டின் தொழில் வளத்தைப் பெருக்கவும், தமிழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், புதிய உத்வேகத்துடன் தமிழக அரசு செயல்பட, இந்த வெளிநாட்டுப் பயணம் பேருதவியாக இருந்தது.

மேலும் இந்தப்பயணம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க உதவியதுடன், வெளிநாட்டு முதலீட்டாளர்களிடையே தமிழ்நாட்டின் மீது ஒரு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதுதவிர தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகம் சார்ந்த அறிவுசார் புரிதலுக்கு இந்தப்பயணம் ஒரு பேருதவியாக அமைந்த ஒரு வெற்றிகரமான பயணமாக இருந்தது", என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x