Published : 10 Sep 2019 09:38 AM
Last Updated : 10 Sep 2019 09:38 AM

ஸ்டெர்லைட்டின் நலத்திட்டங்களுக்கு ஆதரவும், எதிர்ப்பும்: மாவட்ட ஆட்சியரிடம் இருவேறு தரப்பினர் மனு

தூத்துக்குடி

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவும், எதிராகவும் இருவேறு தரப்பினர் நேற்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தூத்துக்குடி தெற்கு வீரபாண்டியபுரம், சாமிநத்தம் கிராமங்களைச் சேர்ந்த மக்கள், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் நேற்று அளித்த மனு விவரம்:

ஸ்டெர்லைட் நிறுவனம், எங்கள் கிராமங்களுக்கு கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர், நீர்நிலைகளை தூர்வாருதல் போன்ற உதவிகளை செய்து வந்தது. ஆனால், சில நபர்கள் இந்த பணிகளை தடுக்கின்றனர். இப்பணிகள் தொடர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் எங்கள் கிராமங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆலையை மீண்டும் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், தூத்துக்குடி கப்பல் சரக்கு கையாளுவோர் சங்கம், லாரி உரிமையாளர் சங்கம், சிட்டி லாரி புக்கிங் சங்கம் ஆகிய சங்கங்களின் நிர்வாகிகள், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் பண்டாரம்பட்டி, மடத்தூர், தெற்கு வீரபாண்டியபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அளித்த மனு விவரம்:

ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு அரசாணை பிறப்பித்து மூடியுள்ளது. இந்நிலையில் ஸ்டெர்லைட் நிர்வாகம், சுற்றியுள்ள கிராமங்களில் பல்வேறு நிதியுதவிகளை, நலத்திட்ட உதவிகளை அளித்து வருகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் துணை போகின்றன.

உதவி செய்வதாக கூறி கிராம மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த ஸ்டெர்லைட் நிர்வாகம் முயன்று வருகிறது. எனவே, ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் நிதி உதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆதரவு மற்றும் எதிர்ப்பாளர்கள் மனு அளிக்க வந்ததை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 3 இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனைக்கு பிறகே மனு அளிக்க வந்த பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.பி.ஆறுமுகம் தலைமையில் நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு:

தூத்துக்குடி மாவட்ட பாசனத்துக்கு தாமிரபரணி ஆற்றில் 26.08.2019 முதல் 14.09.2019 வரை தண்ணீர் திறக்கப்பட் டுள்ளது. ஆனால், கடைக்கோடி குளங் களுக்கு இன்னும் தண்ணீர் வரவில்லை. பயிர்கள் கருகுகின்றன. அணைகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால் 15.9.2019 முதல் 05.10.2019 வரை கூடுதலாக 2,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலம் தானம்

எட்டயபுரம் தாலுகா மேலக்கரந்தையை சேர்ந்த விவசாயி சீனிவாசன் (57) அளித்த மனு: மேலக்கரந்தையில் உள்ள அரசு நடு நிலைப்பள்ளியை, மேல்நிலைப் பள்ளி யாக தரம் உயர்த்த வேண்டும். இதற்காக எனக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுக்க தயாராக உள்ளேன் என, அந்த மனுவில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x