Published : 09 Sep 2019 12:36 PM
Last Updated : 09 Sep 2019 12:36 PM

தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை தாம்பரம் ரயில் நிலையத்திலும் நிறுத்த வேண்டும்: தெற்கு ரயில்வேயிடம் டி.ஆர்.பாலு கோரிக்கை

சென்னை

தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை தாம்பரம் ரயில் நிலையத்திலும் நிறுத்த வேண்டும் என, மக்களவை திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை-சேலம் கோட்டங்களில் செயல்படுத்த வேண்டிய ரயில்வே திட்டங்கள் குறித்து, தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் எம்.பி.க்கள், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகுல் ஜெயினுடன் இன்று (செப்.9) ஆலோசனை நடத்தினர்.

இக்கூட்டத்தில், மக்களவை திமுக தலைவர் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், செல்வம், செந்தில்குமார், மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி, பி.வில்சன், அதிமுக தரப்பில் மாநிலங்களவை உறுப்பினர் முகம்மது ஜான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் என 20-க்கும் மேற்பட்ட எம்;.பிக்கள் பங்கேற்றனர். அவரவர் தொகுதிகளில் செயல்படுத்தப்படும் ரயில்வே திட்டங்களின் நிலைமை உள்ளிட்டவை குறித்து அவர்கள் அதிகாரிகளுடன் ஆலோசித்தனர்.

மேலும், தேர்தல் வாக்குறுதிகளில் தாங்கள் கூறிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் எம்.பி.க்கள் வலியுறுத்தினர். ரயில் நிலையங்களில் கூடுதல் டிக்கெட் கவுண்ட்டர்கள் அமைப்பது, தங்கள் ஊருக்கு வரும் ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். இதையடுத்து, ரயில்வே திட்டங்களின் நிலை குறித்து அதிகாரிகள் விளக்கினர்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, "எங்களின் கோரிக்கைகளை தெற்கு ரயில்வேயிடம் கோரிக்கை மனுவாக அளித்துள்ளோம். முக்கியமாக, சென்னையில் இருந்து மதுரை வரை இயக்கப்படும், தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில், தாம்பரம் ரயில் நிலையத்திலும் நிறுத்துவதற்கு கோரிக்கை விடுத்துள்ளோம். ஏனென்றால், சென்னையில் ரயிலில் ஏறும் மக்களை விட, தாம்பரத்தில் தான் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்", என டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு டி.ஆர்.பாலு எம்.பி. அளித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கோரிக்கைகள்:

சுரங்கப் பாதைகள், ரயில் மேம்பாலங்கள்

* சென்னை- திருப்பதி சாலை, அம்பத்தூர் டி.ஐ. சைக்கிள் நிறுவனம் அருகே ரயில் பாதைகளைக் கடக்க நான்கு வழி மேம்பாலம் அமைத்தல்.

* அம்பத்தூர் நகரில் லெவல் கிராபிக் எல்.சி.4மற்றும் எல்.சி.6, என இரு இடங்களில் புதிய சுரங்கப் பாதைகளும் கொரட்டூர் பகுதியில் எல்.சி. 4-ல் நத்தை வேகத்தில் நடைபெற்று வரும் சுரங்கப் பாதை பணிகளையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும் ‌.

* ஆலந்தூர் பச்சையப்பன் கேட் பகுதியில் நிறுத்தி வைக்க ப்பட்டுள்ள எல்.சி.14 சுரங்கப்பாதை திட்டத்தை தொடர வேண்டும்.

* ஏ.எம். ஜெயின் கல்லூரி அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதை பணிகளைத் தொடங்க வேண்டும்.

* திரிசூலம் ரயில் நிலையம் அருகில் லெவல் கிராஸிங்க் 22-ல் புதிதாக சுரங்கப் பாதை அமைக்க வேண்டும்.

ரயில் சேவைகள்

* அம்பத்தூர் நிலையம் வழியாக இரு மார்க்கங்களிலும் செல்லும் ரயில்கள் அனைத்தும் அம்பத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லவும், அம்பத்தூரை புறநகர் ரயில் சேவை மையமாகவும் அமைத்தல் அவசியம்

* இதற்கிடையில் ஏலகிரி, சப்தகிரி பெங்களூரு,கோவை எக்ஸ்பிரஸ் வண்டிகள் அம்பத்தூரில் நின்று செல்ல நடவடிக்கை தேவை.

* தெற்கு ரயில்வே போக்குவரத்துப் பிரிவு சென்ற 27.06.2019 அன்று பரிந்துரைத்த வண்ணம் சென்னைமதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் தாம்பரம் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் இரண்டு மார்க்கத்திலும் நின்று செல்ல வேண்டும்.

பொது வசதிகள்

* வயது முதிர்ந்தோர் மற்றும் பெண்கள் வசதிக்காக தாம்பரம் ரயில் நிலையத்தில் கூடுதல் எஸ்கலேட்டர் அமைக்க வேண்டும்.

* குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் கணினி முன் பதிவு மையங்கள் அமைக்க வேண்டும்.

இவ்வாறு தனது கடிதத்தில் டி.ஆர்.பாலு எம்.பி. கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x