Published : 07 Sep 2019 05:22 PM
Last Updated : 07 Sep 2019 05:22 PM

கீழடி தொல்லியல் ஆய்வுக்கான தாய்மடி; அரசியல் விழிப்புணர்வு மூலம் காப்பாற்ற வேண்டும்: சு.வெங்கடேசன்

சிவகங்கை,

"தமிழர்களுக்கு கீழடியைப் போன்ற ஆய்வுக்கான ஒரு தாய்மடி கிடைக்குமா எனத் தெரியாது. எனவே இதனை மிகப்பெரிய அரசியல் விழிப்புணர்வு மூலம் காப்பாற்ற வேண்டும்" என மதுரை தொகுதி மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

மதுரை மக்களவை தொகுதி உறுப்பினரும், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருமான சு.வெங்கடேசன் இன்று கீழடியில் தமிழக அரசின் தொல்லியல்துறை சார்பில் நடந்துவரும் அகழாய்வைப் பார்வையிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கீழடியில் தமிழக தொல்லியல்துறை சார்பில் நடந்துவரும் அகழாய்வில் என்னென்ன பொருட்கள் கிடைத்துள்ளன என்பதை தொல்லியலாளர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.

தமிழகத்தில் முதல் முறையாக கீழடியில் நவீன தொழில்நுட்பக் கருவிகளை பயன்படுத்தி அகழாய்வுக்கான இடங்களை தேர்வு செய்து அகழாய்வு நடந்து வருகிறது. இதற்காக தமிழக தொல்லியல் துறையினருக்கு பாராட்டுக்கள்.

கடந்த 2 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட தொழிற்கூடங்கள் தொடர்ச்சியாக தற்போது 300 மீ அளவுக்கு தொழிற்கூடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அது ஏறக்குறைய 3 ஹாக்கி மைதானம் அளவுக்கு அமைந்துள்ளது. தொழிற்கூடமே இவ்வளவு பெரிய பரப்பளவில் இருந்திருக்கும்போது, மக்களின் வாழ்விடம், நகரம் இன்னும் விரிவான பரப்பளவில் இருந்திருக்கும். எனவேதான், கீழடி தமிழர்களின் தாய்மடி என்று சொல்லி வருகிறோம்" என்றார்.

ஆய்வு முடிவுகள் எங்கே?

தொடர்ந்து பேசிய எம்.பி., "கடந்த 2 ஆண்டுகளில் கிடைத்த பல பொருட்களை பகுப்பாய்வு செய்யும் வகையில் பல்வேறு ஆய்வு நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளனர்.

காலப்பகுப்பாய்வுக்காக அமெரிக்காவுக்கும், எலும்பு பகுப்பாய்வுக்கு புனேயில் உள்ள டெக்கான் பல்கலைக்கழகத்திற்கும், செங்கல், சுண்ணாம்பு போன்ற பொருட்களின் நிறமாலை பகுப்பாய்வுக்கு இத்தாலியில் உள்ள பைசாபா பல்கலைக்ககழகத்திற்கு அனுப்பியுள்ளனர். அனுப்பிய பொருட்களின் முடிவுகள் எல்லாம் வந்துவிட்டதா?. அப்படி வந்துவிட்டால் தமிழக அரசு இதுவரை ஏன் வெளியிடாமல் இருக்கிறது என்ற கேள்வி இருக்கிறது. எனவே, தமிழக அரசு ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்ட பொருட்களின் ஆய்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

சங்க கால நாகரிக வளாகமாக அறிவிக்கவும்...

மேலும் பேசுகையில், "கீழடி, கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய கிராமங்கள் உள்ளடக்கிய பகுதிகளை சங்க கால நாகரிக வளாகமாக அறிவித்து மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்க வேண்டும். தமிழர்களுக்கு கீழடியைப் போன்ற ஆய்வுக்கான ஒரு தாய்மடி கிடைக்குமா எனத் தெரியாது. எனவே இதனை மிகப்பெரிய அரசியல் விழிப்புணர்வு மூலம் மட்டுமே காப்பாற்றமுடியும். இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து பாதுகாப்பதோடு, சுமார் 20 ஆண்டுகள் தொடர்ந்து அகழாய்வு மேற்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

மதுரையில் மரபுசார் அருங்காட்சியகம் தேவை..

கீழடியோடு அகழாய்வு துவங்கிய பிரதமர் மோடியின் வாட் நகரில் இந்த ஆண்டு மியூசியம் அமைப்பதற்கு சர்வதேச டெண்டர் கோரியிருக்கின்றனர். அதேபோல், கீழடியில் அமைக்கப்பட வேண்டும்.

மதுரையில் மரபுசார்ந்த அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். சங்க காலத்திலேயே 3 செமீ அளவில் மிகச்சிறிய தாழியை செய்திருக்கிறார்கள் என்றால், எவ்வளவு பெரிய தொழில்நுட்பத்தில் உச்சமாக இருந்திருக்கும். விரல் நகம் அளவுக்கு இருக்கும் சூதுபவளத்தில் காட்டுப்பன்றியின் உருவத்தை முத்திரையாக பொதிக்கப்பட்டிருக்கிறது.

இப்பொருட்கள் நம்முடைய கலைமரபு, தொழில்நுட்ப மரபின் உச்சமாக அமைந்துள்ளது. இதுபோன்று கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிக்கு வைக்க வேண்டும்.

அடுத்தடுத்த கட்ட ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். தமிழ்ச்சமூகம் உலக மனித குல நாகரிகத்திற்கு செய்த பங்களிப்பின் சான்று கீழடி. சர்வதேச தரத்தில் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கல்வெட்டு படிகளை மீட்கவேண்டும்..

தமிழகத்தைச் சேர்ந்த 30 ஆயிரம் கல்வெட்டுகளின் படிகள் மைசூரில் இருக்கின்றன. அதனை தமிழக தொல்லியல்துறை பலமுறை கேட்டும் கொடுக்கவில்லை. அவர்கள் கொடுக்க மறுக்கிறார்கள். அங்குள்ள கல்வெட்டு படிகளை தமிழகத்திற்கு கொண்டு வர தமிழக அரசு மிகத்துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

மதுரையில் தொல்லியல்துறை அலுவலகம்..

"கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேச மாநிலங்களில் மத்திய தொல்லியல்துறை அலுவலகங்கள் 3 மண்டலமாக அமைந்துள்ளது. ஒரு மண்டலத்திற்கு ரூ. 5 கோடி வீதம் மொத்தம் ரூ. 15 கோடி நிதி ஒதுக்குகின்றனர். ஆனால் ஒட்டுமொத்த தமிழகத்தில் ஒரு மண்டலமாக மட்டும் உள்ளது. இதற்குரிய ரூ. 5 கோடிக்கும் குறைவாக உள்ளதால் சமண படுகைகள் போன்ற தொல்லியல் இடங்களை பாதுகாக்க முடியவில்லை. எனவே மதுரையை தலைமையாக கொண்டு ஒரு மண்டலமாக பிரித்து, தொல்லியல் இடங்களை பாதுகாக்கவும், வளர்ச்சி சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்" என்று பேசினார்.

- சுப.ஜனநாயக செல்வம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x