Published : 06 Sep 2019 05:14 PM
Last Updated : 06 Sep 2019 05:14 PM

தலைக்கவசம், சீட்பெல்ட் அணிந்துகொண்டு வாகனத்தை ஓட்டியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய போலீஸார்

திருவண்ணாமலை

செய்யாறில் தலைக்கவசம், சீட்பெல்ட் அணிந்துகொண்டு வாகனத்தை ஓட்டியவர்களுக்கு போலீஸார் பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் காவல்துறை மற்றம் ரோட்டரி சங்கத்தினரும் இணைந்து தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து இன்று (செப்.6) விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். செய்யாறு டிஎஸ்பி சுந்தரம் தலைமை தாங்கி கொடியசைத்து ஊர்வலத்தினை தொடங்கி வைத்தார். செய்யாறு கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து ஊர்வலம் தொடங்கியது. விழிப்புணர்வு ஊர்வலத்தில் பொதுமக்கள் மற்றும் போலீஸார் தலைக்கவசம் அணிந்துகொண்டு இருசக்கர வாகனத்தில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.

அவர்களை தொடர்ந்து தனியார் பள்ளிகளை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு வாகனம் ஓட்டும்போது அவசியம் தலைக்கவசம் அணிந்துகொண்டு வாகனம் ஓட்ட வேண்டும், செல்போன் பேசக்கூடாது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது உள்ளிட்ட விழிப்பணர்வு கோஷங்களை எழுப்பியவாறு ஆற்காடு சாலை, பேருந்து நிலையம், காந்தி சாலை வழியாக மார்க்கெட் பகுதி பெரியார் சிலை வரை சுமார் 3 கிலோ மீட்டர் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும், அவ்வேளையில் அந்த சாலையில் வந்த வாகனங்களில் முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கரை ஒட்டினர். மேலும் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து கொண்டும், காரில் சீட்பெல்ட் அணிந்துகொண்டும் பயணம் செய்தவர்களை மடக்கி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுடன் தலைக்கவசம், சீட்பெல்ட் அணிந்து பாதுகாப்பாக பயணம் மேற்கொண்டதை பாராட்டி அவர்களுக்கு செய்யாறு டிஎஸ்பி சுந்தரம் மற்றும் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மோகன், வட்டாட்சியர் மூர்த்தி ஆகியோர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர்.

தினேஷ்குமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x