Published : 06 Sep 2019 01:36 PM
Last Updated : 06 Sep 2019 01:36 PM

நிலவில் மனிதன் இறங்கும் இடத்தை சந்திரயான் 2 தீர்மானிக்கும்: மயில்சாமி அண்ணாதுரை உறுதி

சென்னை

நிலவில் மனிதன் இறங்கும் இடத்தை சந்திரயான் 2 தீர்மானிக்கும் என்று இஸ்ரோவின் முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

சென்னையில் அறக்கட்டளை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ‘‘இந்தியர்கள் மட்டுமல்ல, வெளிநாட்டு அறிவியலாளர்களும் கூட சந்திரயான் 2 நிகழ்வை உற்றுக் கவனிக்கிறார்கள்.

சர்வதேச அளவில், ஊடகவியலாளர்களும் விஞ்ஞானிகளும்கூட இதை உன்னிப்பாகக் கவனிக்கின்றனர். நிலவில் இனி மனிதன் காலடி வைக்க வேண்டுமெனில், நாம் இறங்கக்கூடிய இடமாகத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.

இதற்கு முதலில் நமது சந்திரயான் பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டும், 14 நாட்களுக்கான படங்களும், நிலவில் இறங்கும்போது என்ன பார்க்கப்பட்டது என்பது குறித்த படங்களும், நமக்கு சில சமிக்ஞைகளைக் கொடுத்திருக்கிறது.

இந்த சமிக்ஞைகள் அனைத்தும் அடுத்தகட்டமாக, மனிதன் தென் துருவத்தில் போய் இறங்குவதற்கான அதிகபட்ச வாய்ப்புகளைக் கொடுக்கும்.
இதன்மூலம் நிலவில் மனிதன் இறங்கும் இடத்தை சந்திரயான் 2 தீர்மானிக்கும். அந்த வகையில் நிலவை ஆய்வு செய்யும் சர்வதேச ஆய்வாளர்கள், இதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்’’ என்று மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x