Published : 05 Sep 2019 08:11 PM
Last Updated : 05 Sep 2019 08:11 PM

தேசிய நினைவுச் சின்னமான வேலூர் கோட்டை அருகே வணிக வளாகம்: வேலூர் ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

வேலூர் கோட்டை அருகில் ஸ்மார் சிட்டி திட்டத்தின் கீழ் வணிக வளாகம் கட்டுவதை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தொல்லியல் துறை, வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜயநகரப் பேரரசரால் 16-ம் நூற்றாண்டில் 133 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட வேலூர் கோட்டை, தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூர் கோட்டை அகழியில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள நேதாஜி மார்கெட்டை இடித்து விட்டு, 219 கோடி ரூபாய் செலவில் இரண்டு மாடி வணிக வளாகம் அமைக்க வேலூர் மாநகராட்சி ஒப்பந்த புள்ளிகள் கோரியுள்ளது.

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த பகுதியில் வணிக வளாகம் கட்ட தடை விதிக்கக்கோரி வேலூரைச் சேர்ந்த பசுமை பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி தஹில் ரமானி மற்றும் நீதிபதி துரைசாமி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தொல்லியல் துறை அனுமதி பெறாமல் நேதாஜி மார்க்கெட் இப்பகுதியில் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், மனுவுக்கு செப்டம்பர் 26-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தொல்லியல் துறை, வேலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் வேலூர் மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x