Published : 05 Sep 2019 02:52 PM
Last Updated : 05 Sep 2019 02:52 PM

அண்ணா, கருணாநிதி குறித்த 'தி இந்து' நூல்களின் திறனாய்வு கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு: ஸ்டாலின் கண்டனம்

சென்னை

கருத்துரிமையையும், கல்வி கற்பதற்கான அடிப்படை உரிமையையும், நசுக்கிக் கொலை செய்யும் அதிகார அத்துமீறலை திமுக கண்டிப்பதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (செப்.5) வெளியிட்ட அறிக்கையில், "இந்தியப் பத்திரிகையுலகில் நீண்ட நெடிய பாரம்பரியமும் எல்லா நிலையிலும் கருத்துரிமை போற்றும் தனித்துவமும் உடைய 'தி இந்து' குழுமத்திலிருந்து வெளியிடப்பட்டிருக்கும், அண்ணாவைப் பற்றிய 'மாபெரும் தமிழ்க் கனவு', மற்றும் தலைவர் கருணாநிதியைப் பற்றிய 'தெற்கிலிருந்து ஒரு சூரியன்', 'ஒரு மனிதன் ஒரு இயக்கம்' ஆகிய நூல்களின் திறனாய்வுக் கூட்டம் ஆரணி நகரில் நடைபெறவிருந்த நிலையில், நிகழ்ச்சி நடைபெறவிருந்த அரங்கம், காரணம் ஏதுமின்றி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அரங்கின் உரிமையாளருக்கு இதற்கான உரிமை உண்டெனினும், ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்டு நிகழ்ச்சி ஏற்பாடுகள் நடைப்பெற்று வந்த நிலையில், மறுப்பு தெரிவிக்கப்பட்டிருப்பதன் மர்மம் என்னவென்று அறிய வேண்டும் என்ற ஆர்வம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது .

அண்மைக்காலமாகவே தமிழ்நாட்டில் மதவாத - பாசிச சக்திகளின் நிகழ்ச்சிகள் - ஊர்வலங்களுக்கு, தமிழக அரசு அனுமதி வழங்கி, அபரிமிதமான பாதுகாப்பும் அளிக்கின்ற நிலையில், திராவிடம் - பொதுவுடைமை - சமூகநீதி - தமிழுணர்வு சார்ந்த நிகழ்வுகளுக்கு, பல்வேறு ஓட்டைக் காரணங்கள் காட்டி அனுமதி மறுக்கப்படுகிறது. காவல்துறையின் கெடுபிடியும் அதிகரித்துள்ளது.
தனிப்பட்ட நிகழ்வுகளில் இத்தகைய நெருக்கடிகள் அதிகரித்திருப்பதுடன், கல்வி நிலையங்களிலும் இது ஊடுருவி வருகிறது.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தத்துவவியல் துறையில் முதுகலை பயின்ற கிருபா மோகன் என்பவர் அத்துறையிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். அம்பேத்கர் - பெரியார் படிப்பு வட்டத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்திற்காகவே பாசிச சக்திகள் பெரும் நெருக்கடி தந்து இவரை நீக்கியிருப்பதாக செய்தித்தாள்களில் செய்திகள் வெளியாகியுள்ளன; அவரும் நேர்காணலில் சொல்லியிருக்கிறார்.

ஜனநாயகம் - அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமையையும், கல்வி கற்பதற்கான அடிப்படை உரிமையையும், நசுக்கிக் கொலை செய்யும் அதிகார அத்துமீறும் இத்தகைய செயல்களை திமுக வன்மையாகக் கண்டிக்கிறது.

அதிமுக ஆட்சியாளர்கள் அவர்களாகவே திருந்த வேண்டும்; இல்லாவிட்டால் தமிழக மக்கள் அவர்களைத் தக்கபடி திருத்துவார்கள்", என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x