Published : 04 Sep 2019 09:47 PM
Last Updated : 04 Sep 2019 09:47 PM

பெரியார் சிலையின் கீழ் உள்ள கடவுள் இல்லை என்ற வாசகத்தை அகற்ற கோரி வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி

பெரியார் சிலைகளின் கீழ் எழுதப்பட்டிருக்கும் கடவுள் இல்லை என்ற வாசகத்தை நீக்க உத்தரவிட வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த தெய்வநாயகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், “தமிழகம் முழுவதும் நிறுவப்பட்டுள்ள தந்தை பெரியாரின் சிலைகளுக்கு கீழ் 'கடவுள் இல்லை' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

பெரியார் எந்த கால கட்டத்திலும் அவ்வாறு கடவுள் இல்லை என கூறவில்லை என்றும் எனவே பெரியார் சிலைகளின் கீழ் எழுதப்பட்டிருக்கும் கடவுள் இல்லை என்ற வாசகத்தை நீக்க உத்தரவிட வேண்டும்”. என கோரியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், மணிக்குமார் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் பெரியார் உயிருடன் இருக்கும்போதே தனக்கு சிலை வைத்து இதுபோல வாசங்கள் பொறிக்கப்பட்டது என்றும் இதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது போன்ற கடவுள் இல்லை என்ற வாசகத்தோடு கூடிய பல கல்வெட்டுகளையும் பெரியார் திறந்து வைத்துள்ளதாகவும்,அதற்கான ஆதாரங்களையும் தாக்கல் செய்தார்.

இதையடுத்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் பெரியார் கடவுள் இல்லை என கூறியதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x