Published : 04 Sep 2019 10:21 AM
Last Updated : 04 Sep 2019 10:21 AM

கட்சியின் உறுப்பினராக இல்லாமலேயே மாநிலத் தலைவராகி விடலாமா? - பாஜகவுக்கு திருநாவுக்கரசர் கேள்வி

திருநாவுக்கரசர்: கோப்புப்படம்

சென்னை

ஒரு கட்சியின் உறுப்பினராக இல்லாமலேயே தலைவராக முடியுமா என, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது பாஜக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து வரும் டிசம்பர் 15-ம் தேதிக்குள் உட்கட்சித் தேர்தலை நடத்தி முடிக்குமாறு தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார். ஆனால், அதற்கு முன்னதாகவே தமிழிசை ஆளுநராக அறிவிக்கப்பட்டுள்ளதால் தற்போது புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், கே.டி.ராகவன், நயினார் நாகேந்திரன், து.குப்புராமு, கனக சபாபதி, மதுரை சீனிவாசன் என மாநில நிர்வாகிகளில் பலர் தலைவர் பதவிக்காக தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தனிக்கட்சி தொடங்கி 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்தை தமிழக பாஜகவின் தலைவராக்க வேண்டும் என்ற குரலும் கட்சிக்குள் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

ரஜினிகாந்த்: கோப்புப்படம்

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களிடம் இதுகுறித்துப் பேசிய திருநாவுக்கரசர், "பாஜகவில் உறுப்பினராக இல்லாமலேயே மாநிலத் தலைவர் ஆகிவிடலாமா? ரஜினிகாந்த் பாஜகவில் உறுப்பினரே இல்லை. உறுப்பினராக இல்லாதவர் எப்படி தலைவராக முடியும்? இவையெல்லாம் வேடிக்கையான விஷயங்கள். இதனை நான் சீரியஸாகப் பார்க்கவில்லை. அப்படிப்பட்ட முடிவுகளை ரஜினிகாந்த் நிச்சயமாக எடுக்க மாட்டார்", என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x