Published : 03 Sep 2019 10:52 AM
Last Updated : 03 Sep 2019 10:52 AM

ஆளுநர் பதவி பிரம்மாண்டமான பொறுப்பு; தெலுங்கு இசையாக இருந்து தேசிய இசையாக ஒலிப்பேன்: தமிழிசை

சென்னை

தமிழகத்துக்கும் தெலங்கானாவுக்கும் பாலமாகச் செயல்படுவேன் என, தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தொழில் ரீதியாக மருத்துவரான தமிழிசை சவுந்தரராஜன், காங்கிரஸ் மூத்த தலைவரான குமரி அனந்தனின் மகள் ஆவார். தமிழிசை, தமிழக பாஜகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இந்நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு முறையும், சட்டப்பேரவை தேர்தலில் இரண்டு முறையும் போட்டியிட்டு தோல்வியடைந்தார். கடந்த மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுகவின் கனிமொழியிடம் தோல்வியடைந்தார்.

தமிழகத்தில் பாஜக தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தமிழக பாஜக தலைமையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம், தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதன்மூலம், தமிழக பாஜக தலைவராக வேறொருவர் நியமிக்கப்பட உள்ளார். இந்நிலையில், ஆளுநர் பொறுப்பால், தான் அரசியலில் இருந்து விலகவில்லை என, தமிழிசை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், "தமிழகத்துக்கு வளர்ச்சியைக் கொடுக்க வேண்டியது என் உரிமை. தமிழகத்துக்குப் பணியாற்ற வேண்டியது என் உரிமை. தெலங்கானாவுக்குப் பணியாற்ற வேண்டியது என் கடமை. இந்த இரண்டு மாநிலங்களுக்கும் நான் பாலமாக இருப்பேன். தமிழ் மகளாகவும், தெலுங்கு இசையாகவும் இருந்து, தேசிய இசையாகவும் ஒலிப்பேன்.

அரசியல் களத்திலிருந்து நான் வெளியேறவில்லை. அரசியலில் இருந்து அரசியலமைப்புச் சட்டத்திற்குள் செல்கிறேன், அவ்வளவுதான். ஆளுநராக இருப்பது, அரசியலமைப்புச் சட்ட ரீதியாக செயல்படும் பொறுப்பு. இது பிரம்மாண்டமான பொறுப்பு", என தமிழிசை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x