Last Updated : 27 Jul, 2015 03:22 PM

 

Published : 27 Jul 2015 03:22 PM
Last Updated : 27 Jul 2015 03:22 PM

துணைவேந்தரை நீக்கக் கோரி போராட்டம்: புதுச்சேரி மத்திய பல்கலை. மாணவர்கள் மோதலால் பதற்றம்

புதுச்சேரி அடுத்த காலாப்பட்டில் மத்திய பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கு நாடுமுழுவதிலும் இருந்தும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்று வருகின்றனர். பல்கலைக்கழக வளாகத்தினுள்ளேயே மாணவர்கள் தங்கும் விடுதியும் அமைந்துள்ளது.

ஆனால், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விடுதி, நூலகம் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதியும் இல்லை எனக்கூறியும், துணைவேந்தரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், துணைவேந்தரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், மாணவர்களுக்கு தேவையான விடுதி, நூலகம், கழிப்பறை போன்ற அடிப்படை வதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று போராட்டம் நடைபெறும் என மாணவர்கள் அறிவித்திருந்தனர்.

அதன்பேரில் இன்று காலை 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து பல்கலை வாயில்முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்கலைக்கழகத்தின் இரண்டு வாயிலும் மூடப்பட்டது. பல்கலைக்கழகத்துக்குள் யாரும் சொல்லமுடியாத நிலை ஏற்பட்டது.

இதனிடையே ஊழியர்களும், சில மாணவர்களும் பல்கலைக்கழகத்தின் உள்ளே செல்ல முயன்றனர். அப்போது, அவர்களை மாணவர்கள் தடுத்து நிறுத்தி தகாராறில் ஈடுபட்டனர். சில மாணவர்கள் ஒருவருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதனை அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் தடுத்தனர். அப்போது, போலீஸாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதனால், மோதல் ஏற்படும் சூழல் உருவாகியது. இதனைத்தொடர்ந்து போலீஸார் மாணவர்கள் மீது லேசான தடியடி நடத்தி மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மாணவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்தவித சமரசம் ஏற்படவில்லை. இது பற்றி அறிந்த தொகுதியின் எம்எல்ஏ கல்யாணசுந்தரம் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இருப்பினும் மாணவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். மாணவர்கள் தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பல்கலைக்கழக வளாகத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு 100க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x