Published : 31 Aug 2019 09:42 AM
Last Updated : 31 Aug 2019 09:42 AM

65 அடி உயரம், 33 அடி அகலம்... பிரம்மாண்ட சணல் பை... அசத்திய மாணவர்கள்

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வை வலியுறுத்தும் வகையிலும், கின்னஸ் சாதனை முயற்சியாகவும் 65 அடி உயரம், 33 அடி அகலம் கொண்ட சணல் பையை உருவாக்கி அசத்தினர் கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள்.

சணல் பையை உருவாக்குவதில், பார்வையற்றோர், திருநங்கையர்களும் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. கோவையைச் சேர்ந்த சந்திரன்ஸ் யுவா அறக்கட்டளை மற்றும் மத்திய ஜவுளித் துறைஅமைச்சகம் சார்பில் செயல்படும் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மைக் கல்லூரி ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தன.

கோவை மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம்-ஒழுங்கு) எல்.பாலாஜி, இந்த சாதனை முயற்சியை தொடங்கிவைத்தார். சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மைக் கல்லூரியின் இயக்குநர் எம்.கே.காந்தி, சந்திரன்ஸ் யுவா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சி.சிவநேசன்,தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்.சசிகலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து சந்திரன்ஸ் யுவா அறக்கட்டளைத் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரிஎஸ்.சசிகலா கூறும்போது, “பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமை கொஞ்சம் நஞ்சமல்ல. பூமியையே பாழ்படுத்திக் கொண்டிருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். ஒருமுறை உபயோகப்படுத்தி, தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசும் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்தவேண்டியது அவசியமாகும். இது தொடர்பாகபொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகவே, இந்த கின்னஸ் சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 65 அடி உயரம், 33 அடி அகலம் கொண்ட சணல் பை, 5 மணி நேரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இதை இடம்பெறச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை நிறுவனப் பணியாளர்கள், மாணவர்கள், அறக்கட்டளை உறுப்பினர்கள் மட்டுமின்றி, பார்வையாற்றோர், மாற்றுத் திறனாளிகளும் இதில் பங்கேற்றனர். இந்த சணல் பை பொதுமக்களின் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x