Last Updated : 30 Aug, 2019 06:22 PM

 

Published : 30 Aug 2019 06:22 PM
Last Updated : 30 Aug 2019 06:22 PM

மாதவரத்தில் தயாராகும் 'பிகில்' விநாயகர்: கண்ணைக் கவரும் சிலைகள்

விநாயகர் சிலைகளைத் தயாரிக்கும் பிரதான இடங்களில் ஒன்றான மாதவரத்தில் இந்த ஆண்டு சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் விதவிதமான சிலைகள் தயாரிக்கப்படுகின்றன.

விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் பக்தர்களுக்கு முக்கியமான விழாவாகும். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தியை இந்துக்களின் முக்கிய விழாவாக கொண்டாடுகின்றனர். ஊர்தோறும் விநாயகருக்கு சிலை வைத்து தினமும் காலை, மாலை பூஜை செய்து கொண்டாடி பின்னர் ஊர்வலமாக எடுத்துச்சென்று ஆறு, ஏரி, குளத்தில் கரைப்பார்கள். சென்னை போன்ற நகரத்தில் கடலில் கரைக்கிறார்கள்.

சென்னையில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி 6,000 சிலைகள் வரை வைக்கப்படுகின்றன. 5 அடியிலிருந்து 12 அடி வரை விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்யப்பட்டு குறிப்பிட்ட நாளில் ஊர்வலமாக எடுத்துச்சென்று கடலில் கரைக்கின்றனர். ஒவ்வொரு விநாயகர் சதுர்த்திக்கும் பல்வேறு வகையிலான விநாயகர் சிலைகள் செய்யப்படுகின்றன.

இந்த ஆண்டு சில மாவட்டங்களில் விதைப்பந்துகளால் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலைகள், மீன்களுக்கு உணவாகும் வகையில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன. சென்னைக்கு விநாயகர் சிலைகளைத் தயாரிப்பதில் ஓட்டேரி, மாதவரம் உள்ளிட்ட இடங்கள் முக்கியமானவை.

விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் மூன்றே நாட்கள் இருக்கும் நிலையில் அனைத்து இடங்களிலும் விநாயகர் சிலை செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

மாதவரத்தில் விதவிதமாக கண்ணைக் கவரும் வகையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. உயரமாக பிரம்மாண்ட வடிவிலும் விநாயகர் சிலையைச் செய்வதற்கு எந்த விதமான ரசாயனப் பொருட்களையும் சேர்க்கவில்லை. வைக்கோல், களிமண், கட்டுமானத்திற்கு கட்டைகள், ரசாயனம் இல்லாத வண்ணங்கள் முதலியவற்றையே சிலை செய்யப் பயன்படுத்தப்படுகிறது.

இங்கு 1 அடி முதல் 15 அடி வரை விநாயகர் சிலைகளைச் செய்து தருகின்றனர். அதுமட்டுமல்லாமல் நாம் எந்த விநாயகர் வேண்டும் என்று புகைப்படமாக கொடுத்தால் அதில் உள்ளது போன்று தத்ரூபமாகத் தயார் செய்து தருகின்றனர்.

இங்கு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளின் விலை குறைந்தப்பட்சம் ரூ.5,000 லிருந்து அதிகபட்சம் ரூ.90,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு 'பிகில்' விநாயகர், 'டான்' விநாயகர், 'சிக்ஸ் பேக்' விநாயகர், 'பாகுபலி' விநாயகர், 'புலி' விநாயகர், சிவன் விநாயகர், கற்பக விநாயகர் எனப் பல ரக விநாயகர்கள் ஸ்பெஷல் தயாரிப்புகளாக உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x