Published : 30 Aug 2019 05:54 PM
Last Updated : 30 Aug 2019 05:54 PM

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் குற்றச்சாட்டுகள் பதிவு

உதகை

கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், காவலாளி ஓம் பகதூர்(50) கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஷயான், கேரளாவை சேர்ந்த சந்தோஷ், தீபு, சதீசன், உதயகுமார், ஜிஜின் ஜாய், ஜம்சீர் அலி, வாளையாறு மனோஜ், மனோஜ் சமி மற்றும் குட்டி என்கிற பிஜின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கோத்தகிரி நீதிமன்றத்திலிருந்து இந்த வழக்கு கடந்தாண்டு, மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணை நடந்து வரும் நிலையில், ஷயான் மற்றும் வாளையாறு மனோஜ் ஆகிய இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் உள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று நீதிபதி பி.வடமலை முன்பு வந்தது. விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட 10 பேரும் ஆஜராயினர்.

இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் போலீஸார் இன்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஆதாயக் கொலை, கூட்டுக்கொள்ளை உட்பட 13 குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தனர். அரசு வழக்கறிஞர் பால நந்தகுமார் அரசு தரப்பில் ஆஜரானார். வழக்கறிஞர் ஜன்னத்துல் பிர்தோஷ், குற்றச்சாட்டுகளை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மலையாளத்தில் மொழிபெயர்த்தார்.

இந்நிலையில், குற்றச்சாட்டுகள் குறித்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடுத்த மாதம் 13-ம் தேதி பதிலளிக்க வேண்டும் எனக் கூறி, விசாரணையை அடுத்த மாதம் 13-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களை வழக்கிலிருந்து விடுக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதாக, குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர் ஆனந்த் தெரிவித்தார். அதுவரை சாட்சிகளிடம் விசாரணையை நிறுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x