விவசாயிகளுக்கான உழவு மானியத்தை அதிகரிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்
ஜி.கே.வாசன்: கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை

விவசாயிகளுக்கான உழவு மானியத்தை அதிகரிக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "தமிழக அரசு நேரடி நெல் விதைப்பு செய்யும் விவசாயிகளுக்கு உழவு மானியமாக ரூ.600 வழங்கப்படும் என்பதை இன்னும் கூடுதலாக்கி அறிவிப்பை வெளியிட்டு விவசாயிகளுக்குப் பேருதவியாக இருக்க வேண்டும்.

குறிப்பாக தமிழகத்தில் இப்போது விவசாயத் தொழில் தண்ணீர் தட்டுப்பாடு, பொருளாதார மந்த நிலை, விலைவாசி ஏற்றம், தொழிலாளிகள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் விவசாயத் தொழிலைச் சரிவர செய்ய முடியாமல் பெரிதும் கவலைக்கு ஆளாகியுள்ளனர். விவசாயிகளின் துயர் துடைத்தால் மட்டுமே விவசாயத் தொழிலையும், விவசாயிகளையும் காப்பாற்ற முடியும்.

இச்சூழலில் தற்போது விவசாயத்திற்கு ஓரளவுக்கு தண்ணீர் கிடைக்கப் பெற்றாலும் விவசாயத்திற்கு உரம் உள்ளிட்ட இடுபொருட்களை வாங்கி விவசாயம் செய்வதற்குப் போதிய பொருளாதாரம் இல்லாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசு நேரடி கொள்முதல் விதைப்பு செய்யும் விவசாயிகளுக்கு ரூ.600 உழவு மானியமாக அறிவித்துள்ளது. இருப்பினும் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் ஒரு ஏக்கருக்கு அறிவித்துள்ள மானியத்தை இன்னும் அதிகப்படியாக கூடுதலாக வழங்கவும், நெல் விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்படும் 50 சதவீத விதை நெல்லை இன்னும் அதிகப்படியாக கூடுதலாக இலவசமாக வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் மேட்டூர் அணை நிரம்பியதாலும், மாநிலம் முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வருவதாலும் கடைமடை வரை பாசனத்திற்குத் தண்ணீர் செல்ல தமிழக அரசு தொடர் நடவடிக்கை எடுத்தால் இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் சுமார் 25 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி நடைபெற வாய்ப்புள்ளது.

எனவே, தமிழக அரசு நெல் விவசாயிகளுக்கு தேவையான விதை நெல்லை தரமாக, தட்டுப்பாடில்லாமல் கிடைக்கவும், உரம் தட்டுப்பாடில்லாமல் தாராளமாக கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விவசாயிகள் பயிர்க் கடன் கேட்டிருந்தால் அது உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

தமிழக அரசு இப்போதைய பருவ விவசாயத்தில் நெல் சாகுபடி முறையாக, சரிவர நடைபெற வேண்டும் என்பதை முக்கிய கவனத்தில் கொண்டு நெல் விவசாயிகளின் கோரிக்கைகளான உரம், விதை நெல், கடன், மானியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு நிறைவேற்றி தந்தால் விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும், விவசாயத் தொழிலும் தடையில்லாமல் நடைபெறும்", என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in