Published : 28 Aug 2019 03:30 PM
Last Updated : 28 Aug 2019 03:30 PM

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோரை மருத்துவமனையில் சேர்த்தால் ரூ.5 ஆயிரம் பரிசு: புதுச்சேரி பட்ஜெட் சிறப்பம்சங்கள்

புதுச்சேரி

சாலை விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நபருக்கு 5,000 ரூபாய் பரிசு வழங்கப்படும், அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தன் பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி இன்று (ஆக.28) பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 4-வது முறையாக அவர் தாக்கல் செய்யும் பட்ஜெட் இது. பட்ஜெட்டின் முக்கிய சிறப்பு அம்சங்கள்:

விவசாயிகளுக்கும், விவசாய கூலி தொழிலாளர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் நடப்பாண்டு நடைமுறைப்படுத்தப்படும்.

பாசிக், பாப்ஸ்கோ ஆங்கிலோ பிரெஞ்ச், சுதேசி பாரதி மில் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் தேவையை கருத்தில்கொண்டு ஊதியம் மற்றும் ஓய்வூதியத்துக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தற்காப்பு பயிற்சிகள் தரப்படும். மாணவர் காவல்படை என்ற புதிய திட்டத்தை தொடங்கப்பட உள்ளது.

எட்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு மனஅழுத்தம், சுமையை போக்க மகிழ்ச்சியான பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும். 9 முதல் 12 வரை படிப்போருக்கு தொழில் முனைவோருக்கும் பாடத்திட்டம் புதிதாக அறிமுகமாகும்.

புதுச்சேரி மாநிலத்தில் பத்து நவீன கைப்பந்து விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும். நான்கு பல்நோக்கு விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும். ரூபாய் 11 கோடியில் புதுச்சேரியில் இரண்டு அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

புதுச்சேரியில் பத்து எழுத்தாளர்களுக்கு கம்பன் புகழ் விருது செப்டம்பரில் தரப்படும். ஓவியர்கள் பயன்பெற நிகழ்கால ஓவியக்கூடம் இரு மாதங்களில் அமையும்.

15 ஆயிரம் வீடுகளில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய அரசு மானியத்தில் சூரிய மின் தகடுகள் நடப்பாண்டு வழங்கப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு 4.5 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தியாகும். தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களில் சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி செய்ய அரசு மூலம் குறைந்த வட்டியில் கடன் தரப்படும்.

61 நாட்கள் மீன்பிடித் தடைக்கால நிதி 5,500 ரூபாயில் இருந்து 6,500 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. மீனவர்களுக்கான மழைக்கால நிவாரணம் 2,500-ல் இருந்து 3,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சாலை விபத்தில் அடிப்படுபவர்களை காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நபருக்கு 5,000 ரூபாய் பரிசு வழங்கப்படும்.

உடனடி மருத்துவ உதவிக்காக நெரிசல் மற்றும் குறுகிய சாலைகளில் விரைந்து சென்று சிகிச்சை தர ஜிபிஎஸ் வசதி கொண்ட அவசர மருத்துவ சிகிச்சை தரும் பயிற்சி கொண்ட நபர்களால் இயக்கப்படும் இரு சக்கர மோட்டார் வாகனங்களும் அறிமுகப்படுத்தப்படும்.

ஆயுஷ் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெறும் நோயாளிகளுக்கு ரூ. 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு தரும் திட்டம் செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும்.

12 ஆண்டுகளுக்கு மேல் குடமுழுக்கு நடக்காத கோயில்களில் குடமுழுக்கு நடக்க நிதியுதவி தரப்படும். கோயில்களில் உள்ள தங்கம், வெள்ளி ஆபரணங்கள், கடவுள் சிலைகள், அசையும் சொத்துகள் உட்பட அனைத்து ஆவணங்களையும் டிஜிட்டலாக்கி பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அசையா சொத்துகள் விவரம் கல்வெட்டுகளிலும், இணையத்திலும் மக்கள் பார்வைக்கு பதிவேற்றப்படும். சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி 1 கோடி ரூபாயிலிருந்து 2 கோடியாக உயர்த்தபடும்.

மத்திய அரசு திட்டக்குழுவை கலைத்து நிதி ஆயோக்கை அமைத்துள்ளதால், மாநிலத் திட்டக்குழு தொடர்வது மற்றும் புதுச்சேரியில் ஆண்டுத் திட்ட அளவை அக்குழு பரிந்துரைப்பது தொடர்பாக கேள்விகள் எழுகிறது. இதை ஆய்வு செய்து விரைவில் தகுந்த கொள்கை முடிவை அரசு எடுக்கும்.

முதல்வரின் பொருளாதார மற்றும் நிர்வாக ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்படும். இக்குழுவில் ஓய்வு பெற்ற மற்றும் அனுபவம் வாய்ந்த அரசு அதிகாரிகள், துறை வல்லுநர்கள் இடம் பெறுவார்கள்.

போலீஸ் வாக்கி டாக்கிகள் டிஜிட்டல் முறையில் நவீனமாக்கப்படும். கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் அமலாகும்.

முருங்கப்பாக்கத்தில் பாரம்பரிய சுற்றுலா கிராமம் உருவாக்கப்படும். அலையாத்தி காடுகளில் பயணித்து இயற்கை சுற்றுலா அனுபவம் பெற முருங்கப்பாக்கத்திலிருந்து அரிக்கன்மேட்டுக்கு பாண்டி நெக்லஸ் என்ற படகு சவாரி நடப்பாண்டு தொடங்கப்படும்.

சுற்றுலா பயணிகளுக்காக மொபைல் ஆப் உருவாக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் முதல்வரின் பட்ஜெட் உரையில் இடம்பெற்றிருந்தன.

மேலும், ஜிஎஸ்டியால் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க வரி சலுகை தற்போது தர இயலாத நிலை உள்ளது எனவும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

செ.ஞானபிரகாஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x