Published : 27 Aug 2019 09:56 AM
Last Updated : 27 Aug 2019 09:56 AM

தொழிற்சாலைகள் பாதுகாப்பில் முதலிடம் வகிக்கும் தமிழகம்!

தொழிற்சாலைகள் பாதுகாப்பில் தமிழக அரசு மிகுந்த கவனம் செலுத்துகிறது. தொழிற்சாலைகளில் விபத்து நேரிட்டு, தொழிலாளர்கள் உயிரிழப்பதையும், காயமடைவதையும் முற்றிலுமாக தடுக்க முழுவீச்சிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் தீவிர செயல்பாடுகளால், தொழிற்சாலைகள் பாதுகாப்பில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்றார் இத்துறையின் இயக்குநர் கே.மனோகரன்.

தமிழக அரசின் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் மற்றும் கோவை மண்டல தேசிய பாதுகாப்புக் குழுமம் சார்பில் ஈரோட்டில் ஜவுளி, தோல் பதனிடுதல் மற்றும் பிரிண்டிங் தொழிற்சாலைகளில் தீங்கு, அபாயம், பாதுகாப்பு மற்றும் சுகாதார மேலாண்மை தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது. இதில், பல்வேறு தொழிற்சாலைகளின் பிரதிநிதிகள் 400-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கருத்தரங்கை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் இயக்குநர் கே.மனோகரன் தொடங்கிவைத்து, “தொழிற்சாலைகளில் உயரத்தில் இருந்து கீழே விழுதல், மின்சார விபத்து, கழிவுநீர் தொட்டிகளில் சுத்தம் செய்யும்போது ஏற்படும் விபத்து மற்றும் பட்டாசு தொழிற்சாலை விபத்துகளில்தான் சுமார் 90 சதவீத உயிரிழப்பு ஏற்படுகிறது. அரசாங்கம், நிர்வாகம் மற்றும் தொழிலாளர்கள் இணைந்து செயல்பட்டால், விபத்தில்லா தொழிற்சாலைகளை உருவாக்க முடியும்” என்றார்.
பின்னர் அவரிடம் பேசினோம். “தமிழகத்தில் உள்ள சுமார் 43,500 தொழிற்சாலைகளில், ஏறத்தாழ 22 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். பேராபத்து உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள 150-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அவசர நிலை மற்றும் பாதுகாப்பு ஒத்திகை, காவல், தீயணைப்பு, வருவாய்த் துறையினருடன் இணைந்து நடத்தப்படுகிறது.

இதேபோல, அனைத்து தொழிற்சாலைகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தொழிலாளர்களின் உடல் நலனும் ஆண்டுக்கொருமுறை பரிசோதிக்கப்படுகிறது.

அந்தந்த தொழிற்சாலைகளுக்கே அதிகாரிகள் நேரில் சென்று, பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை தொழிலாளர்களிடம் ஏற்படுத்தி வருகின்றனர். வடமாநிலத் தொழிலாளர்கள் பணிபுரியும் தொழிற்சாலைகளில் இந்தி மொழியிலும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

வளர்ந்து வரும் தொழில்நுட்பம், புதிய இயந்திரங்களைப் பயன்படுத்தும் தொழிலாளர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

தொழில் துறையில் தேசிய அளவில் தமிழகம் முன்னிலை வகிக்கும் நிலையில், தொழிற்சாலைகள் பாதுகாப்பில் நாட்டிலேயே முதலிடம் வகிக்கிறது. வெளி மாநிலங்கள், வெளி நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள், தங்களது தொழிற்சாலைகளை தமிழகத்தில் தொடங்குவதால், தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேசமயம், தொழிற்சாலை விபத்துகள் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள், தொழிற்சாலை பாதுகாப்பில் உரிய விதிமுறைகளைக் கடைப்பிடித்து, விபத்துகளைத் தடுப்பதில் ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.

கட்டிட கட்டுமானப் பகுதிகளின் பாதுகாப்பு தொடர்பாக தனிப் பிரிவு அமைக்கப்பட்டு, மின் விபத்து மற்றும் உயரமான பகுதியிலிருந்து விழுவதைத் தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்பு தொடர்பாக தமிழ், இந்தியில் குறும்படங்கள் தயாரிக்கப்பட்டு, தொழிலாளர்கள் மத்தியில் திரையிடப்படுகிறது. இதேபோல, சிவகாசியில் பட்டாசுத் தொழிலாளர்களின் பாதுகாப்பு, விழிப்புணர்வுக்காக தனி பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. நடமாடும் வாகனம் மூலமாகவும் விபத்து தவிர்ப்பு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. பட்டாசு தொழிலாளர்கள், உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்களுக்காக தனித்தனியே குறும்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன” என்றார்.

கோவை ரூட்ஸ் குழுமங்களின் மனிதவளப் பிரிவு இயக்குநர் கவிஞர் கவிதாசன் பேசும்போது, “ஒவ்வொரு பணியாளரும் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கல்வியை வழங்க வேண்டும். அதேபோல, ஒவ்வொரு தொழிற்சாலையிலும் பாதுகாப்பான வேலைச் சூழலை உருவாக்கித் தர வேண்டும். பாதுகாப்பு தொடர்பான நடைமுறைகளை கட்டாயப்படுத்த வேண்டும். தொழிற்சாலை பாதுகாப்பில் அக்கறையுடன் செயல்படும் பணியாளர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கி ஊக்குவிக்க வேண்டும். பாதுகாப்பு என்பது கூட்டுமுயற்சி.

யாரோ ஒருவர் செய்யும் தவறால் பெரு விபத்து நேரிட்டு, பலரும் பாதிக்கப்பட நேரிடும். எனவே, அவ்வப்போது பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி முகாம்களை நடத்த வேண்டும். மேலும், பணியாளர்களுக்கு மட்டுமின்றி, கண்காணிப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் முதன்மை நிர்வாகிகளுக்கும் இதுபோன்ற பயிற்சி முகாம்களை நடத்த வேண்டும்” என்றார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் ஈரோடு மண்டலத் தலைவர் என்.சண்முகம் பேசும்போது, “தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், பாதுகாப்பு சாதனங்களை முறையாகப் பயன்படுத்த வேண்டும். பாதுகாப்பற்ற செயல்களால்தான் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, அனைத்து சாதனங்களையும் முறையாகப் பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். இப்பகுதியில் தொடர்ந்து பாதுகாப்பு கருத்தரங்குகளை நடத்த வேண்டும்” என்றார். தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர் கே.ஜெகதீசன் வரவேற்றார். கருத்தரங்கின் முக்கியத்துவம் குறித்து ஈரோடு இணை இயக்குநர் இ.வேல்முருகன் பேசினார். தேசிய பாதுகாப்புக் குழும கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் கே.ஆர்.ரவிச்சந்திரன் நன்றி கூறினார். ஈரோடு, திருப்பூர், கோவை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் பங்கேற்றனர்.
இக்கருத்தரங்கில், ராசாயனம் கையாளுதல், சேமிப்பில் பாதுகாப்பு, மின்சார பாதுகாப்பு, கழிவுநீர் பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்தலில் பாதுகாப்பு, தனிமனித பாதுகாப்பு நடத்தை மற்றும் செயல்பாடுகள் குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x