Published : 26 Aug 2019 12:04 PM
Last Updated : 26 Aug 2019 12:04 PM

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு: தலைவர்கள் கண்டனம்

சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலை

சென்னை

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இச்சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஸ்டாலின், தலைவர், திமுக

அரசியல் சட்டத்தை உருவாக்கித் தந்த அம்பேத்கரின் உருவச் சிலையை நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் வஞ்சக நெஞ்சம் கொண்ட வன்முறையாளர் சிலர் சிதைத்த செயல் மிகக் கடும் கண்டனத்திற்குரியது. நாடு முழுவதும் தலைதூக்கிவரும் சாதி - மத வெறித்தனங்கள், அவற்றிற்கு ஊக்கமளித்திடும் சனாதன சக்திகள், தமிழகத்திலும் அண்மைக்காலமாகத் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன என்பதற்கு எடுத்துக்காட்டுதான் வேதாரண்யத்தில் நடந்திருக்கும் வேதனை.

ஜனநாயக அரசியல் என்கிற முகமூடி அணிந்துள்ள பாசிச சக்திகள் விதைக்கும் விஷ விதைகள் முளைக்கின்ற காரணத்தால் பெரியார், அம்பேத்கர் சிலைகளை சிதைப்பதும் தலையைத் துண்டித்து ஆனந்தப்படுவதுமான ஆபத்து தொடர் நிகழ்வாகி வருகிறது. இத்தகைய வன்முறையாளர்களை முன்கூட்டியே கண்டறிந்து அவர்களின் கோர வெறியைக் கட்டிப்போட்டுக் கட்டுப்படுத்தும் கடமை உணர்வை மாநில உளவுத்துறை இழந்துவிட்டதோ என்ற சந்தேகத்தை பலமாக ஏற்படுத்தும் வகையில் சம்பவங்கள் நிகழ்கின்றன.

சட்டம் - ஒழுங்குக்கு சவால் விடும் இத்தகைய போக்குகளை அரசும் காவல்துறையும் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காமல் உடனடியாக அடக்கி ஒடுக்கி அப்புறப்படுத்த வேண்டும். வேதாரண்யத்தில் சிதைக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கர் சிலை, சீரமைக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து அங்கு மெல்ல மெல்ல அமைதி திரும்புகிற நல்ல அறிகுறியின் வாயிலாக மதவெறி - சாதிவெறி சக்திகளுக்கு எதிராகவே தமிழக மக்கள் இருக்கிறார்கள் என்பது சற்று ஆறுதல் தருகிறது.

தமிழகம் முழுவதும் இத்தகைய சக்திகளை வேரறுத்திட வேண்டிய அவசர அவசியத் தேவையை உணர்ந்து, அ.தி.மு.க. அரசு வேகமாகவும் விவேகத்துடனும் செயல்பட வேண்டும். சுமூகமான நல்லிணக்க வாழ்வை மேற்கொண்டு வரும் தமிழக மக்களை, வகுப்புவாத - சாதியவாத வெறியர்களுக்கு இரையாகிவிடாமல் எச்சரிக்கையுடன் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மதச்சார்பற்ற - சமூகநீதி ஆர்வலர்கள் அனைவருக்கும் இருக்கிறது.

அந்தப் பணியை எந்தவித சமரசமும் செய்துகொள்ளாமல் மேற்கொண்டிட திமுக உறுதி பூண்டுள்ளது. பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட மக்களுக்காகத் தங்களை முழுமையாக அர்ப்பணித்த தலைவர்களின் சிலைகளை சிதைக்க முற்படுவோரின் அற்பச் சிந்தனைகளை அகற்றியெறியும் பணிகளைத் திமுக தனது தோழமை சக்திகளுடன் இணைந்து மேற்கொள்ளும்.

வைகோ, பொதுச் செயலாளர், மதிமுக

நாகை மாவட்டம், வேதாரண்யம் காவல் நிலையம் எதிரிலேயே அம்பேத்கர் சிலையின் தலைப் பகுதி உடைத்து நொறுக்கப்பட்டு இருப்பது வேதனை அளிக்கிறது. இச்செயல் கடும் கண்டனத்துக்கு உரியது. கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பு இரு சமூகங்களிடையே மோதல் ஏற்பட்டு, வன்முறைத் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. காவல்துறையின் அலட்சியத்தின் காரணமாக, நேற்று ஓர் கும்பல் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு வேதாரண்யம் கடை வீதியில் வன்முறை வெறியாட்டத்தை நடத்தி உள்ளது. மேலும் பட்டியலின மக்களின் கடைகளையும் அடித்து நொறுக்கித் தரைமட்டமாக்கி உள்ளது. காவல்துறை அமைதியாக வேக்கை பார்த்ததால், அந்த வன்முறைக் கும்பல் ஆத்திரம் தலைக்கு ஏறி, அண்ணல் அம்பேத்கர் சிலையை உடைத்து நொறுக்கி இருக்கிறது. அம்பேத்கர் சிலையை உடைத்த வன்முறைக் கும்பலை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.

தொல்.திருமாவளவன், பொதுச் செயலாளர், விசிக

சாதி பயங்கரவாதிகளை ஒடுக்குவதில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளக்கூடாது எனத் தமிழக முதல்வர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட சாதி பயங்கரவாதிகளை ஒடுக்குவதிலும் தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவர்கள் அனைவரையும் குண்டர் சட்டத்தில் சிறைப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இதுவே ஒரு மோசமான முன்னுதாரணமாக ஆகிவிடும். தமிழகம் சாதி, மத பயங்கரவாதிகளின் வேட்டைக்காடாக ஆகிவிடக்கூடாது. பெரியார் உழைத்து உருவாக்கிய சமூக நீதி பூமியாகவே இது தொடர வேண்டும். அதைக் காப்பதற்கு நாம் எல்லோரும் உறுதி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இரா.முத்தரசன், மாநில செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

இரு தரப்பினர் மோதலை பயன்படுத்தி அம்பேத்கர் சிலையை உடைத்து தகர்த்துள்ளனர். இத்தகைய செயலை மிக வன்மையாக கண்டிப்பதுடன், இச்செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருப்பினும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட உரிய நடவடிக்கைகளை அரசும், மாவட்ட நிர்வாகமும் மேற்கொள்ள வேண்டும். வன்முறை செயல்கள் ஒடுக்கப்படுவதுடன், அமைதி திரும்பவும், சுமுகமான சூழ்நிலை உருவாகவும் உரிய நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். சுமுகநிலை உருவாக அனைத்து தரப்பினரும் முன் வர வேண்டும்.

கே.பாலகிருஷ்ணன், மாநில செயலாளார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

தேசிய தலைவரை ஒரு சாதிய அடையாளமாக கருதி அவரது சிலைகளை உடைப்பது, அவமானப்படுத்துவது தேசத்தை அவமானப்படுத்துவதற்கு சமமாகும். சிலையை உடைத்து அப்புறப்படுத்தும் வரை காவல்துறை தடுத்து நிறுத்தாமல் கை கட்டி வேடிக்கை பார்ப்பதும் பல கேள்விகளை எழுப்புகிறது. இவ்வாறு காவல்துறை ஒரு சார்புத் தன்மையோடு செயலற்று இருப்பது தொடர்கதையாகி வருவது தமிழகத்தில் மக்கள் ஒற்றுமையையும், சட்டம்-ஒழுங்கையும் பாதுகாக்க உதவாது.

இப்பகுதியில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து விசாரித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? - ரம்யா பாண்டியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x