Published : 24 Aug 2019 10:27 AM
Last Updated : 24 Aug 2019 10:27 AM

கந்தர்வக்கோட்டையில் தனியார் பள்ளியின் கெடுபிடியால் பள்ளி செல்லா மாணவிகள் இருவரை அரசுப் பள்ளியில் சேர்த்து உதவிய விஏஓ

கே.சுரேஷ்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக் கோட்டை செட்டித் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த்(38). டூவீலர் மெக்கானிக் ஆன இவரது மனைவி சுமதி, மகள்கள் தனுஷ்சிகா(8), நிரஞ்சனி(6). மகள்கள் இருவரும் கந்தர்வக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயின்று வந்தனர்.

இந்நிலையில், இவர்களது ஓட்டு வீடு கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதன்பிறகு இது வரை சீரமைக்கப்படவில்லை. இதற்கிடையில், குடும்ப பிரச்சி னையால் மனைவியுடன் கோபித்துக் கொண்டு வெளியூர் சென்றுவிட்ட ஆனந்த் கடந்த 9 மாதங்களாக வரவில்லை. உறவினர்களின் ஒத்துழைப்புடன் சுமதி தனது குடும்பத்தைக் கவனித்து வருகிறார்.

இந்நிலையில், பள்ளிக் கட்டணத்தை செலுத்த முடியாத அளவுக்கு சுமதியின் குடும்பம் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. மாணவிகளை அரசுப் பள்ளியில் சேர்க்கலாம் என்றாலும் கட்டணம் நிலுவையில் இருப்பதால் மாற்றுச் சான்றிதழை கொடுக்க தனியார் பள்ளி நிர்வாகம் மறுத்து விட்டது. இதனால், இருவரும் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள், கிராம நிர்வாக அலுவலர் அரங்க.வீரபாண்டியனிடம் தெரிவித்தனர். இதையடுத்து அண்மையில் சுமதியின் வீட்டை வீரபாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர், அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கிய அரசியை தொடர்புகொண்டு ஆலோசனை செய்தார்.

அப்போது, மாற்றுச் சான்றிழ் இல்லாமல் இருவரையும் பள்ளியில் சேர்த்துக் கொள்வதாக தலைமை ஆசிரியர் உறுதி அளித்துள்ளார். இதையடுத்து தனுஷ்சிகா, நிரஞ்சனி ஆகியோரை கிராம நிர்வாக அலுவலரே அழைத்து சென்று அரசுப் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அப்போது இருவருக்கும் அரசின் இலவச சீருடை, புத்தகப் பை, பாடப் புத்தகங்களை ஆசிரியர்கள் வழங்கினர். தற்போது இருவரும் உற்சாகமாக பள்ளிக்குச் செல்லத் தொடங்கி உள்ளனர். இதையைடுத்து சுமதியும் மகிழ்ச்சி அடைந்தார்.

மாணவிகளின் கல்விக்கு வழிகாட்டிய கிராம நிர்வாக அலுவலர் அரங்க.வீரபாண்டியன் மற்றும் தகவல் தெரிவித்த மனோகரன் உள்ளிட்டோருக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து ஆசிரியர் மணி கண்டன் உள்ளிட்டோர் சுமதியின் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை செய்தனர். உத்திரம் முறிந்தும், சுவர்கள் பெயர்ந்தும், ஓடுகள் பிரித்து எறியப்பட்டும் வசிக்க பயனற்ற நிலையில் சுமதியின் வீடு உள்ளதால் அரசு இவர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்க வேண்டுமென்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதுகுறித்து சுமதி கூறியபோது, “பணம் கட்டி மாற்றுச் சான்றிதழ் பெற முடியாத நிலையில் இருந்ததால் மகள்களை பள்ளிக்கு அனுப்பவில்லை. கஜா புயலால் வீடு முழுமையாக சேதம் அடைந்துவிட்டது. ஆனால், அரசிடம் இருந்து நிவாரண பொருளோ, நிவாரணத் தொகையோ கிடைக்கவில்லை. அரசு வீடு கட்டிக்கொடுக்க வேண்டும். இந்த சூழலில் பிள்ளைகள் இருவரும் பள்ளிக்குச் செல்வது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அதே சமயம், தந்தையைப் பார்க்கமுடியாமல் மகள்கள் இருவரும் தினமும் ஏங்குகிறார்கள். எனவே, என் கணவரை குடும்பத்துடன் சேர்த்துவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x