Published : 23 Aug 2019 09:09 AM
Last Updated : 23 Aug 2019 09:09 AM

அரிய வகை அறுவை சிகிச்சை மூலம் 6 வயது சிறுவனை நடக்க வைத்த மருத்துவர்கள்: சென்னை அரசு பொது மருத்துவமனை சாதனை

சென்னை

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் முடநீக்கியல் துறை மருத்துவர்கள், அரிய வகை அறுவை சிகிச்சையின் மூலம், நடக்க முடியாத 6 வயது சிறுவனை நடக்க வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக அரசு பொது மருத்துவமனையின் டீன் டாக்டர் ஜெயந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘பிரிடில் போன் டிசீஸ்’ என்பது எளிதில் வளையும் மற்றும் உடையும் தன்மை கொண்ட ஒருவகை மரபணு குறைபாடுகள் உள்ள எலும்பு நோயாகும். இது குழந்தைகளுக்கு பிறவியிலேயே மரபணு குறைபாடு உள்ள பெற்றோரிடம் இருந்து 10 ஆயிரம் குழந்தைகளில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுக்கு வரக்கூடிய நோயாகும்.

இந்த நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடைய எலும்பு, வளையும் மற்றும் எளிதில் உடையக்கூடிய தன்மையுடன் இருப்பதால் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் நடக்க முடியாமல் மிகுந்த வலியுடன் சிரமப்படுவார்கள். சென்னை கொளத்துரைச் சேர்ந்த சரவணன் என்ற சிறுவனுக்கு இத்தகைய குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அச்சிறுவன் பிறந்த 6 மாதம் முதல் 5 வயது வரை ‘பாமிட்ரோநேட்’ என்னும் மருந்து கொடுக்கப்பட்டு அதன் பின்பு கடந்த மே, ஜூன் மாதங்களில் 2 முறை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. எலும்பு வளர வளர விரிவடையக்கூடிய ‘டெல்ஸ்கோபிக் ராடு’ என்னும் கம்பி, வளைந்த எலும்புகளுடன் பொருத்தப்பட்டு கால்களை நேராக்க பயிற்சி அளிக்கப்பட்டது. 6 மாதத்தில் இருந்து டாக்டர்கள் அளித்த தொடர் சிகிச்சை மற்றும் 6 வயதில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை மூலம் எந்த துணையும் இல்லாமல் சிறுவன் நன்றாக நடக்கிறான்.

இதைபோன்று அவனுடைய தந்தைக்கும் ஒரு காலில் ஏற்பட்ட முறிவு சரிசெய்யப்பட்டது. அவருக்கு ‘டெரிபேராடைடு’ என்ற மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இருவரும் நன்றாக உள்ளனர்.

இந்த சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் மேற் கொண்டால் ரூ.10 லட்சத்துக்கும் மேல் செலவாகும் ஆனால் எவ்வித செலவுமின்றி இங்கு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

செய்தியாளர் சந்திப்பின்போது சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் தீன் முகம்மது இஸ்மாயில், பசுபதி சரவணன், ராஜ் கணேஷ், சுரேஷ்பாபு, சரத்பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x