Published : 22 Aug 2019 11:08 AM
Last Updated : 22 Aug 2019 11:08 AM

ஏழைகள் பணத்தை உண்டவர்கள் சிறையில் களி உண்பார்கள்; இதில் அரசியல் பழிவாங்கல் இல்லை: எச்.ராஜா ட்விட்டரில் கருத்து

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது பின்னணியில் அரசியல் பழிவாங்கல் இல்லை என பாஜக தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் நேற்றிரவு (புதன்கிழமை இரவு) சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இந்த கைது நடவடிக்கை 10 ஆண்டுகளுக்கு முன்னதாக அமித் ஷா கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கான பழிவாங்கல் என்று காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், "ஏழைகள் பணத்தை உண்டவர்கள் சிறையில் களி உண்பார்கள். இறுதியாக ஊழல் வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 15 மாதங்களாக 25 தடவை முன் ஜாமீன் பெற்று கைதிலிருந்து தப்பித்து வந்தார் சிதம்பரம். கடைசியில் டெல்லி உயர் நீதிமன்றம் இவரை கைது செய்ய தடை விதிக்க முடியாது என்று கூறியதன் அடிப்படையில் சிதம்பரம் கைது செய்யப்பட்டார். இதில் அரசியல் பழிவாங்கல் எங்கே வந்தது?

சிதம்பரம் ஒரு கொடூரமான சர்வாதிகாரி. 1991ல் கண்டணூரில் எனது தகப்பனாரின் மாணவர் ராமசாமி அம்பலம் ஊர் முழுவதும் தாமரை வரைந்து பாஜகவிற்கு வாக்களிக்க சுவர் விளம்பரம் செய்திருந்தார். என் ஊரில் பாஜகவா என்று கூறி அவரை அழைத்து மிரட்டி அனைத்தையும் அழிக்கச் சொன்னவர் இவர்.

பாஜக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது என்று திமுக புலம்புகிறது. சிந்தித்துப் பாருங்கள். பிரதமர் மோடி சென்னை வந்தபோது கோ பேக் மோடி என்று ஆட்டம் போட்டீர்களே? இன்று உங்களின் ஜந்தர் மந்தர் கூட்டத்திற்கு எதிராக பாஜக உங்களைப் போல் செயல்படவில்லை. ஏனென்றால் பாஜக ஜனநாயகக் கட்சி" இவ்வாறு அடுத்தடுத்த ட்வீட்களில் அவர் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x