Published : 24 Jul 2015 07:42 AM
Last Updated : 24 Jul 2015 07:42 AM

10 லட்சம் பேரில் ஒருவரை தாக்குற தோல் நோயால் பாதிக்கப்பட்ட மாணவி குணமடைந்தார்: ஸ்டான்லி அரசு மருத்துவமனை சாதனை

10 லட்சம் பேரில் ஒருவருக்கு வரக்கூடிய ஆபத்தான தோல் நோயால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஒன்றரை மாத தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார்.

இது தொடர்பாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் தோல் நோய் மருத்துவத் துறை பேராசிரியர் வி.ஆனந்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நீர் கொப்பளங்கள், தோல் உரிதல், கண், வாய் உட்பட பல இடங்களில் புண்களுடன் ஷர்மிளா (20) என்ற கல்லூரி மாணவி கடந்த மே மாதம் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவர் தோல் நோய் மருத்துவப் பிரிவில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டார்.

பரிசோதனை செய்ததில், அவர் டாக்சிக் எபிடெர்மோ நெக்ரோலைசிஸ் வகை தோல் நோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. நோய் எதிர்ப்பு குறைபாட்டால் 10 லட்சம் பேரில் ஒருவருக்குதான் இந்த நோய் உருவாகும். இந்த நோய் வந்தால், உடலின் மேல்புறத் தோல் உரிந்துவிடும். இதனால் வியர்வை நாளங்கள் பாதிக்கப்பட்டு, உடல் வெப்பநிலை கட்டுக்குள் இருக்காது.

நோய்த் தொற்று ஏற்பட்டு, படிப்படியாக உடல் உறுப்புகள் செயலிழந்து, மரணத்தை ஏற்படுத்தும்.இந்நோயால் பாதிக்கப்பட்டு 30 சதவீதம் அளவுக்கு தோல் உரிந்தாலே மரணம் ஏற்படும். ஆனால், இந்த பெண் 70 சதவீதம் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டம் மூலம் ரூ.1.50 லட்சத்துக்கு உயர் வகை மருந்து வாங்கி உடலில் செலுத்தப்பட்டது. பல்வேறு துறை மருத்துவர்களின் ஒன்றரை மாத தொடர் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்துள்ளார்.

என்ன காரணத்தால் இந்த நோய் வரும் என்று இதுவரை திட்டவட்டமாக வரையறுக்கப்படவில்லை. காய்ச்சல் ஏற்பட்டு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாலும், அதற்காக வழங்கப்படும் மருந்துகளாலும், மரபியல் காரணங்களாலும் இந்நோய் வரலாம்.

இந்த மாணவிக்கு முதலில் காய்ச்சல் வந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். ஒரு சில தினங்களில் அவருக்கு தோல் நோய் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுவதில் உண்மையில்லை. இங்கு சிகிச்சைக்கு வரும் முன்பு அவருக்கு செலுத்தப்பட்ட, அவர் உட்கொண்ட மருந்து விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஒவ்வாமை ஏற்படுத்தாத மருந்துகளே அவருக்கு வழங்கப்பட்டிருந்தன.

இவ்வாறு அவர் கூறினார்.

ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் ஐசக் கிறிஸ்டியன் மோசஸ், நிலைய மருத்துவ அலுவலர் எம்.ரமேஷ், தோல் நோய் துறை துணை பேராசிரியர் ஆஃப்தாப் ஜமீலா வாசாப் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x