Published : 21 Aug 2019 03:23 PM
Last Updated : 21 Aug 2019 03:23 PM

இடஒதுக்கீட்டைப் பற்றி விவாதம் வேண்டும்; ஆர்எஸ்எஸ் தலைவரின் ஆபத்தான 'மயக்க பிஸ்கட்': கி.வீரமணி கண்டனம்

சென்னை

இடஒதுக்கீட்டைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ் தலைவரின் கருத்து ஆபத்தான 'மயக்க பிஸ்கட் என, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கி.வீரமணி இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன்பகவத் கடந்த 18-ம் தேதி அன்று டெல்லியில் 'ஞான உத்சவ்' நிகழ்ச்சியில் நிறைவுரையாற்றும்போது, மிகவும் ஆபத்தான அவர்களது அடுத்த திட்டமான இடஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டும் நோக்கத்தோடு, மிக லாவகமாக 'விஷ உருண்டையை தேனில் நனைத்துக்' கொடுப்பது போலப் பேசியுள்ளார்.

"இடஒதுக்கீடு தாழ்த்தப்பட்ட, பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டோர் ஆகியவர்களுக்கு தற்போது இந்திய அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள உரிமைப்படி வழங்கப்பட்டு வருவதை நீக்கிவிட, இடஒதுக்கீடு வேண்டும் என்பவர்களும், வேண்டாம் என்பவர்களும் சுமுகமான சூழ்நிலையில் அமர்ந்து விவாதித்து அதுபற்றி ஒரு நல்ல முடிவுக்கு வர வேண்டும்" இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

இது சமூகநீதிக்குக் குழிப்பறிக்கும் முயற்சி என்பதால், காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்கள் இதைக் கண்டித்து "இது ஆபத்தான, இடஒதுக்கீட்டினை ஒழிக்க ஒரு முன்னோட்ட முயற்சி, நாடி பிடிக்கும் முதற்கட்டப் பணியின் துவக்கம் என்றே கருத வேண்டும்" என்று தெளிவாகக் கண்டித்து அறிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கெனவே இடஒதுக்கீட்டின் அடிப்படையைத் தகர்க்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 15(4), 15(5) ஆகிய பிரிவுகளிலும், 16 ஆவது பிரிவிலும் உள்ள, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் ஆகியவர்கள் நீங்கிய மற்ற உயர்சாதியினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு அளித்துள்ளபடி அரசியலமைப்புச் சட்டத்தின்படி பெரிய நிர்வாகப் பதவிகளில் இடஒதுக்கீட்டினைப் பின்பற்றாமல் நேரடி நியமனங்கள், மாநில அரசுகளுக்குரிய நியமன அதிகார பறிப்புகள் ஆகியவை மூலம், முன்பே சமூக நீதிக்கு உலை வைக்கத் தொடங்கப்பட்டு விட்டது.

ஆர்எஸ்எஸ் தலைவரின் ஆபத்தான 'மயக்க பிஸ்கட்'

இடஒதுக்கீட்டினை சமூக நீதியை அடியோடு ஒழித்துக் கட்டி, வெறும் பொருளாதார அடிப்படை என்பதை சில காலம் வைத்து இறுதியில் இடஒதுக்கீடே தேவையில்லை என்ற முடிவை இந்த ஐந்தாண்டு ஆட்சி காலத்திற்குள் நிறைவேற்றிடும் திட்டத்திற்கு ஆர்எஸ்எஸ் தலைவரின் இந்த ஆபத்தான தேன் பூசப்பட்ட 'மயக்க பிஸ்கட்டை' சமூக நீதியாளர்கள், ஒடுக்கப்பட்டோர், சிறுபான்மையோர் உட்பட அனைவரும் ஒன்றுபட்டு எதிர்த்து தடுத்து நிறுத்திட முன்வர வேண்டும்.

1951 இல் நடந்தது என்ன?

1951 இல் பெரியார் காலத்தில் கம்யூனல் அரசாணை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் உட்பட தீர்ப்புக் கூறிய பின், பெரியார் தலைமையில் வெடித்துக் கிளம்பிய தமிழ்நாட்டு சமூக நீதி கிளர்ச்சியால்தான் முதன்முறையாக, ஜனநாயகவாதியான அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, சட்ட அமைச்சர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோர் அரசியலமைப்புச் சட்ட 15 ஆவது பிரிவில் 4 என்ற உட்பிரிவினை சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டோர் என்று நீண்ட விவாதத்திற்குப் பின் பொருளாதார அடிப்படையை அறவே விலக்கி நிறைவேற்றினர்.

அதன் பிறகு இந்திரா சஹானி வழக்கு என்ற மண்டல் கமிஷன் வழக்கில் 9 நீதிபதிகளைக் கொண்ட முழு அமர்வில் இடஒதுக்கீடு பற்றியதான பல பிரச்சினை அலசி ஆராயப்பட்டு தீர்ப்புத் தரப்பட்டது.

அம்பேத்கர் என்ன சொன்னார்?

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானப் பகுதியாகவும் இது நிலைத்துள்ளது. எனவே இடஒதுக்கீடு சமுகநீதி என்பது பிச்சை அல்ல; சலுகை அல்ல; ஒடுக்கப்பட்ட, காலங்காலமாக கல்வி வேலைவாய்ப்பு மறுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோரின் உரிமையாகும், பிறப்புரிமை ஆகும். இது அம்பேத்கர் பயன்படுத்தும் சொல்.

இடஒதுக்கீடு மறு ஆய்வுக்கு உட்பட்டதல்ல!

மண்டல் கமிஷன் பரிந்துரை செயலாக்கம் பற்றி இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது, மண்டல் அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு, விவாதம் தொடர்ந்து இரவு 12 மணிக்கு மேலும் குறிப்பாக மக்களவையில் நடைபெற்றபோது, இன்று மோடி கூட்டணி அரசில் அமைச்சராக உள்ள நண்பர் ராம்விலாஸ் பஸ்வான் தான் இந்தத் தீர்மானத்துக்கான விவாதத்தை அன்று தொடங்கினார்.

அதில் அத்தனை உறுப்பினர்களும் கட்சி பேதமின்றி, பிரதமர் இந்திரா காந்தி மூலம் இடஒதுக்கீடு என்பது மறு ஆய்வுக்கு உட்பட்டதல்ல என்று உறுதி கூறிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்றைக்கு மத்தியில் அமைச்சராக இருக்கும் ராம்விலாஸ் பஸ்வான் சாட்சியும்கூட.

அதன்படி அரசியலமைப்புச் சட்டம் அதன் அடிக்கட்டுமானப் பகுதியாக வைத்துள்ள இடஒதுக்கீட்டினைப் பற்றி இப்போது எதற்குத் தேவையற்ற விவாதம்?

ஆர்எஸ்எஸ் தலைவர்கள் எதிர்ப்பும் ஆதரவும்

இதே ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத் சில ஆண்டுகளுக்கு முன், பீகார் சட்டப்பேடவைத் தேர்தலின்போது இப்படி மறுபரிசீலனை செய்யவேண்டிய ஒன்றே இடஒதுக்கீடு என்று பேசி அது பெரும் எதிர்ப்பை, எதிர்கொண்டது.

நிதிஷ்குமார், லாலுபிரசாத், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி உட்பட பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடி தங்கள் நிலையை தலைகீழாக மாற்றிக் கொண்டு இடஒதுக்கீடு அவசியம் தேவை என்று கூறவில்லையா? அதன்பின் டெல்லியிலேயே ஆர்எஸ்எஸ் தலைவர் தனது நிலையை மாற்றி இடஒதுக்கீடு தேவை என்று கூறவில்லையா?

இப்போது தங்களுக்கு பெரும்பான்மை கிடைத்து விட்டது; இதைப் பயன்படுத்தி இடஒதுக்கீட்டினை ஒழித்துவிடலாம் என்ற திட்டத்தின் முன்னோட்டம்தானே அண்மையிலான ஆர்எஸ்எஸ் தலைவரின் ஆழம் பார்க்கும் வேலை.

5000 ஆண்டு சமுக நீதிக்கான தீர்வே இடஒதுக்கீடு

5000 ஆண்டு கால சாதிவருண தர்மக் கொடுமையிலிருந்து மீளும் எளிய முயற்சியே இடஒதுக்கீடு. அது சட்டப்படியேகூட நிரப்பப்படாத கொடுமை உள்ளது. இந்நிலையில் இப்படி ஓர் ஆரிய சூழ்ச்சியா இது முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.

இது துரோணச்சாரியார்கள் காலமும் அல்ல, ஒடுக்கப்பட்டோர் ஏகலைவன்களும் அல்ல. தமிழ்நாட்டிலும், பிற மாநிலங்களிலும் உள்ள சமூகநீதியாளர்களும், தலைவர்களும் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

எப்போதும் விழிப்புடன் இருப்பதே சுதந்திரத்திற்கும், உரிமைகளுக்கும் நாம், தர வேண்டிய விலையாகும். ஆபத்து வருமுன்னரே தடுத்தாக வேண்டும்", என கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x