Last Updated : 20 Aug, 2019 01:22 PM

 

Published : 20 Aug 2019 01:22 PM
Last Updated : 20 Aug 2019 01:22 PM

முல்லைப் பெரியாறு அணை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கு: கேரள அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை,

முல்லைப் பெரியாறு அணை மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில் கேரள அரசிற்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புப் பணிக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படைடை நியமிக்க வேண்டும், அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியான 136 அடி முதல் 155 அடி வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என தமிழக பொதுப் பணித்துறை மூத்த பொறியாளர் சங்கம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தமிழக பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்க மாநில முன்னாள் துணைத் தலைவர் விஜயகுமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கினைத் தாக்கல் செய்த விஜயகுமார் இறந்துவிட்ட காரணத்தால், தமிழக பொதுப் பணித்துறை மூத்த பொறியாளர் சங்க மாநில முன்னாள் தலைவர் ரெங்கனை இந்த வழக்கில் சேர்க்கக் கோரினார். அதனை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.

அரசுத் தரப்பில் இதேபோன்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் லஜபதிராய்," உச்ச நீதிமன்றத்தில் 152 அடிக்கு மேலுள்ள, கேரள அரசின் வரம்பிற்குட்பட்ட பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கு தமிழக அரசின் வரம்பிற்குட்பட்ட 136 அடி முதல் 152 அடி வரையிலுள்ள நீர்ப்பிடிப்புப் பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரும் வழக்கு. மத்திய அரசுத் தரப்பில் 2006 நவம்பரில் அணைப்பகுதியில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் அளிக்கப்பட்ட ரகசிய அறிக்கையிலேயே ஆக்கிரமிப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், இது குறித்து கேரள அரசிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x