Published : 26 Jul 2015 10:04 AM
Last Updated : 26 Jul 2015 10:04 AM

பள்ளி மாணவர்கள் வளர்த்த 25 ஆயிரம் மரக்கன்றுகள் கொடையாக வழங்கப்பட்டன

பள்ளி மாணவர்கள் வளர்த்த 25 ஆயிரம் மரக்கன்றுகள் பொது வெளிகளில் நடுவதற்கு கொடையாக வழங்கப் பட்டுள்ளன.

சென்னையில் 16 பள்ளிகளில் ஐஐஐபிஎஃப்டி (Indo International Initiative for Billion Fruit Trees) என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் 25 ஆயிரம் மரக் கன்றுகள் இந்த ஆண்டு வளர்க்கப்பட்டுள்ளன. அந்த மரக் கன்றுகள், பொது வெளிகளில் நடுவதற்காக ‘ட்ரீ பேங்க்’ என்ற அமைப்பிடம் வழங்கப்பட்டன. இதற்கான விழா நுங்கம்பாக்கத்தில் உள்ள செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஐஐஐ பிஎஃப்டி அமைப்பின் நிறுவனர் அழகு பெருமாள் பேசியதாவது:

கடந்த நான்கு ஆண்டுகளாக பள்ளிகளில் மாணவர்களைக் கொண்டு மரக்கன்றுகள் வளர்த்து வருகிறோம். மாணவர்கள் தங்கள் வீட்டில் கிடைக்கும் பழங்களின் விதைகளை கொண்டு வருவார்கள். அவர்கள் அதை நடுவதற்கு நாங்கள் உதவி செய்வோம். அதன் பிறகு மாணவர்கள் அதற்கு தினமும் நீர் ஊற்றி சில மாதங்கள் வளர்ப்பார்கள். மரக்கன்றுகள் வளர்ந்த பிறகு, தேவைப்படுவோருக்கு அவற்றை கொடுத்து விடுவோம். இதன் மூலம் இளைய தலைமுறையினருக்கு மரங்களின் மீது பாசம் வளரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் 110-வது வார்டு கவுன்சிலர் நுங்கை மாறன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசும்போது, “ஆயிரக்கணக்கில் மரக்கன்றுகளை நடுவது தேவையற்ற செயல் போன்று இன்று சிலருக்கு தோன்றலாம். ஆனால் இவை வளர்ந்த பிறகு கனிகள் தருவது மட்டுமல்லாமல் இந்த பூமியை செழிப்பாக வைத்துக் கொள்ளவும் உதவும்” என்றார்.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வர் பெலின் ஜெசி தலைமை தாங்கினார். ஜெய்கோபால் கரோடியா மேல்நிலைப்பள்ளி, பால வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி, நுங்கம்பாக்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளி, நந்தனம் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளின் மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x