Published : 20 Aug 2019 08:55 AM
Last Updated : 20 Aug 2019 08:55 AM

கடலில் கலந்து வீணாகும் மழை வெள்ளத்தை சேமிக்க ஆழியாற்றில் தடுப்பணை கட்ட கேரளா அரசுடன் பேச்சுவார்த்தை: சட்டப்பேரவை துணைத் தலைவர் தகவல்

தென்மேற்கு பருவ மழையால் நிரம்பி வழியும் கோரையாற்று தடுப்பணையை ஆய்வு செய்த சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர். படம்: எஸ்.கோபு.

பொள்ளாச்சி

பருவ மழைக் காலங்களில் கேரளா வுக்கு சென்று கடலில் கலந்து வீணா கும் மழை வெள்ளத்தை சேமிக்க ஆழியாறு ஆற்றின் குறுக்கே 3 இடங்களில் தடுப்பணைகள் கட்ட கேரளா அரசுடன் அடுத்த மாதம் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார். .

தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில், பொள் ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்யும் மழைநீர் பள்ளம், சிற்றோடைகள் வழியாக மேற்கு நோக்கி பாய்ந்து கேரளாவின் பாரதப்புழா ஆற்றில் சேர்ந்து, கடலில் கலந்து வீணாகி வருகிறது. இந்த ஓடைகளின் குறுக்கே தடுப்ப ணைகளை கட்டினால் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும், விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயரும் என பொள்ளாச்சி எம்எல்ஏவும், சட்டப்பேரவை துணைத் தலைவரு மான பொள்ளாச்சி ஜெயராமனிடம் விவசாயிகள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகம் இப்பகுதியில் நடத்திய ஆய்வில், பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய பகுதியின் மண், அதிக நீரை உறிஞ்சும் தன்மை கொண்டது என கண்டறியப்பட்டது. இதையடுத்து மண்ணூர் கோரையாற்றின் குறுக்கே, ரூ.1.79 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு, மே மாதம் முடிக்கப்பட்டது. இந்த தடுப்பணையில் ஆண்டுக்கு, ஒரு டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்கப்படுவதால், 45 ஏக்கர் நிலம் பாசனம் பெறுவதுடன் தடுப்பணையை சுற்றியுள்ள 54 திறந்த வெளிக் கிணறுகள் 16 ஆழ்குழாய் கிணறுகளின் நீர்மட்டம் உயர்வதும் உறுதி செய்யப்பட்டது. தற்போது பெய்த தென்மேற்கு கனமழையால் இந்த தடுப்பணையில் நீர்நிறைந்து உள்ளது.

நேற்று தடுப்பணையை ஆய்வு செய்த சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் இது குறித்து கூறியதாவது: நிலத்தடி நீரைச் செறிவூட்டும் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மழைநீரை சேகரிக்க பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது. அதில் கோரையாற்றில் கட்டப்பட்டுள்ள இந்த தடுப்பணை சிறந்த உதாரண மாக உள்ளது. இந்த தடுப்பணையின் மூலம் ஆண்டுக்கு 1 மில்லியன் கன அடி தண்ணீரை சேமித்து வைக்க முடியும்.

இதேபோல மழைக்காலத்தில் கேரளாவுக்கு சென்று கடலில் கலந்து வீணாகும் தண்ணீரை சேமிக்க, ஆழியாறு ஆற்றில் 3 இடங்களில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் மழைநீர் சேமிக்கப்படுவதுடன், கேரளத்தில் வெள்ள அபாயம் ஏற்படாமல் தடுக்கவும் முடியும். இது குறித்து அடுத்த மாதம் கேரளா அரசுடன் நல்லாறு திட்டம் குறித்து நடைபெறும் பேச்சுவார்த்தையில், ஆழியாறு ஆற்றின் குறுக்கே 3 இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x