Published : 19 Aug 2019 08:36 AM
Last Updated : 19 Aug 2019 08:36 AM

காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது; 40 ஆயிரம் அஞ்சல் உறைகள் விற்பனையாகி சாதனை: சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் தகவல் 

ப.முரளிதரன்

சென்னை

காஞ்சிபுரத்தில் 48 நாட்கள் நடைபெற்ற அத்திவரதர் வைபவத் தில், அஞ்சல் துறை சார்பில் வெளி யிடப்பட்ட சிறப்பு அஞ்சல் உறை விற்பனையில் சாதனை படைத் துள்ளது. 40 ஆயிரம் சிறப்பு அஞ்சல் உறைகள் விற்பனையாகியுள்ளன.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கி தொடர்ந்து 48 நாட்கள் நடைபெற்று, நேற்று முன்தினம் (17-ம் தேதி) நிறைவடைந்தது. கடந்த 1979-ம் ஆண்டுக்குப் பிறகு 40 ஆண்டுகள் கழித்து நடைபெற்ற இந்த வைபவத்தில் ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இந்த வைபவத்தை நடத்த ரூ.44 கோடி செலவாகியுள்ளது.

அதேசமயம், உண்டியல் காணிக்கை மூலம், ரூ.7 கோடி வருமானம் கிடைத்தது. இந்த வைபவத்தில், அஞ்சல் துறை சார்பில் வெளியிடப்பட்ட சிறப்பு அஞ்சல் உறையும் விற்பனையில் சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து, சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஆர்.ஆனந்த் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது:

இந்திய அஞ்சல் துறை சார்பில் சிறப்பு அஞ்சல் தலைகள் மற்றும் அஞ்சல் உறைகள் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது. இதில், அஞ்சல் தலைகளைப் பொறுத்தவரை சமூகத்தில் பிரபலமாக இருந்தவர்களின் நினைவாக வெளியிடப்படுகிறது. அஞ்சல் தலை வெளியிடப்படும் அளவுக்கு அந்த நபர் தகுதி வாய்ந்தவராக இருக்க வேண்டும்.

மேலும், அவ்வாறு வெளியிடப்படுவதற்கு குறைந்தது ஓரிரு வருடங்கள் ஆகும். அத்துடன், ஒரு வருடத்துக்கு ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் அஞ்சல் தலை வெளியிடப்படும்.

இதனால், அஞ்சல் தலை வெளியிட முடியாத சமயங்களில் சிறப்பு அஞ்சல் உறைகள் வெளி யிடப்படும். இதற்கு தலைமை அஞ்சல் துறை தலைவரின் அனுமதி பெற்றாலே போதுமானது. எனினும், அஞ்சல் உறைகளும் சாதாரணமாக வெளியிடப்பட மாட்டாது.

உதாரணமாக, கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டு 100 அல்லது 150 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டோ அல்லது காந்தியடிகள் தமிழகத்துக்கு வந்ததைப் போன்ற சிறப்பு நிகழ்வுகளின் அடிப்படையில் அஞ்சல் உறை வெளியிடப்படும்.

அந்த வகையில், அத்திரவரதர் வைபவம் ஒரு சிறப்பு வாய்ந்த நிகழ்வாக இருந்ததால், அதைப் போற்றும் வகையில் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட வேண்டும் என்ற இந்துசமய அறநிலையத் துறையின் வேண்டுகோளை ஏற்று தமிழ்நாடு வட்ட அஞ்சல் துறை சார்பில் அத்திவரதர் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடந்த ஜுலை 18-ம் தேதி வெளியிட்டார்.

இதில், புறஊதாக் கதிர் வீச்சைப் பயன்படுத்தி 1,000 சிறப்பு அஞ்சல் உறைகள் அச்சிடப்பட்டன. ஓர் உறையின் விலை ரூ.50 ஆகும். தபால் தலைகள் மற்றும் அஞ்சல் உறைகளை சேகரிப்பவர் களுக்காக இவை வெளியிடப்பட் டன. இதைத் தவிர, பொதுமக்கள் வாங்குவதற்காக ரூ.20 என்ற குறைந்த விலையிலும் சிறப்பு அஞ்சல் உறைகள் வெளியிடப் பட்டன.

இந்த அஞ்சல் உறைகள் சென்னை, அண்ணாசாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத் திலும், காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயில் அருகில் சிறப்பு அரங்கு அமைத்தும் விற்பனை செய்யப்பட்டன.

பொதுவாக, இவ்வாறு வெளியிடப்படும் சிறப்பு அஞ்சல் உறைகள் 1,000 என்ற எண்ணிக்கை அளவுக்குத்தான் அச்சிடப்படும். ஆனால், இந்த சிறப்பு அஞ்சல் உறைக்கு பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்ததால் கூடுதலாக அச்சடிக்கப்பட்டன. இதன் மூலம், 40 ஆயிரம் அஞ்சல் உறைகள் விற்பனையாகியுள்ளன.

இதற்கு முன்பு, கொடைக் கானலில் உள்ள பப்ளிக் பள்ளி சார்பில் வெளியிடப்பட்ட சிறப்பு அஞ்சல் உறைதான் மிக அதிகபட் சமாக 30,000 வரை விற்பனையாகி யுள்ளன. அதற்கு அடுத்தபடியாக அத்திவரதர் வைபவத்தை முன் னிட்டு வெளியிடப்பட்ட அஞ்சல் உறை அதிக அளவு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

இவ்வாறு ஆர்.ஆனந்த் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x