Published : 17 Aug 2019 01:35 PM
Last Updated : 17 Aug 2019 01:35 PM

கனிமொழியின் ஆட்சி மாற்ற கனவு கானல் நீர் போன்றது: கடம்பூர் ராஜூ

கனிமொழியின் ஆட்சி மாற்ற கனவு கானல் நீர் போன்றது என விமர்சித்துள்ளார் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ.

தூத்துக்குடியில் இன்று (சனிக்கிழமை) புதிய பேருந்துகள் சேவையை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கிவைத்தார். 8 அரசு விரைவுப் பேருந்துகள் மற்றும் 6 அரசுப் பேருந்துகளின் சேவையை அவர் தொடங்கிவைத்தார்.

பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கு ஈசிஆர் வழியாக முதன்முதலில் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்கள் வேளாங்கன்னி செல்லவும், இஸ்லாமியர்கள் நாகூர் செல்லவும், இந்துக்கள் ராமேஸ்வரம் செல்லவும் வசதியாக அந்தந்த வழித்தடங்களில் தூத்துக்குடியிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது.

தென்மேற்கு பருவமழையால் மேற்குதொடர்ச்சி மழைப்பகுதி அணைகள் நிரைந்திருக்கின்றன. பாபநாசம் அணை நீர்மட்டம் 106 அடியை எட்டியுள்ளது.

பாபநாசத்திலிருந்து கார் சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்த நிலையில் முதல்வர் இன்னும் ஒன்றிரண்டு தினங்களில் தண்ணீர் திறந்துவிடப்படும் என அறிவித்திருக்கிறார். குடிமரமாத்துப் பணிகள் துரிதமாக நடைபெற்றுவருகிறது. ஆற்றுநீர் வீணாகக் கடலில் சென்று கலப்பதைத் தடுப்பதற்காகவே புன்னைக்காயலில் தடுப்பணை கட்டும் பணி தொடங்கப்பட்டது. அது விரைவில் முடிவுபெறும் நிலையில் உள்ளது. சாத்தான்குளத்தில் ஒரு தடுப்பணை கட்டவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.

ஸ்டாலின், கனிமொழியின் லட்சியம் ஆட்சி..

தொடர்ந்து பேசிய அமைச்சர் "திமுகவைப் பொறுத்தவரை ஸ்டாலின், கனிமொழியின் ஒற்றை லட்சியம் ஆட்சியைக் கைப்பற்றுவதே. விமான நிலைய விரிவாக்கப் பணி காத்திருக்கிறது. விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக 601 ஏக்கரை நிலத்தை முதல்வர் உத்தரவின் பேரில் கையகப்படுத்தி பணிகள் நடந்து வருகின்றன. ஆனால், இதனைப் பற்றியெல்லாம் கனிமொழிக்கு அக்கறையில்லை. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் பணி என்னவென்றே தெரியாமல் இருக்கிறார். எப்போது பார்த்தாலும் ஆட்சி மாற்றம் பேசுகிறார்.

நாடாளுமன்றத் தேர்தலின்போது ஆட்சி மாற்றம் என்றார். மத்தியில் ஆட்சி மாறியது. வேறு அமைச்சர்கள் கொண்டு பாஜக ஆட்சி அமைந்தது. பின்னர் சட்டப்பேரவையிலும் ஆட்சி மாற்றம் என்றார். ஆனால் அவரின் கனவு கானல் நீர் போல் ஆனது. ஆட்சி அதிகாரம் மீதுதான் அவர்களின் கனவு இருக்கிறதே தவிர மக்கள் பணி செய்யும் முகாந்திரம் ஏதும் அவர்களுக்கு இல்லை" என்றார்.

சட்டப்பேரவையிலும் நாடாளுமன்றத்திலும் மக்கள் குரலை எழுப்பும் ஒரே கட்சி அதிமுக என்றும் கூறினார்.டி.ராஜா இன்று நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அதிமுக. இன்று திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இருந்துகொண்டு அவர்கள்தான் திமுகவுக்கு எடுபிடியாக செயல்படுகிறார்கள். அதிமுக யாருக்கும் என்றைக்கும் எடுபிடியாக செயல்பட வேண்டிய அவசியமில்லை. திமுகவுடன் கூட்டணியில் இருந்துகொண்டு திமுகவின் எடுபிடியாக செயல்படும் அவர்கள் இத்தகைய விமர்சனங்களை தெரிவிக்க வேண்டாம்.

அதேபோல், "நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்காமல் போனதற்கு காங்கிரஸ் முன்னாள் அமைச்சரின் மனைவி நளினி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் வாதாடியதே காரணம். நீட் தேர்வு விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாடே தொடர்கிறது. நீட்டுக்கு எதிராக கடைசி நிமிடம் வரை போராடிய ஒரே மாநிலம் தமிழகம்தான். சந்தர்ப்பம் வரும்போது மீண்டும் போதிய அழுத்தத்தைக் கொடுப்போம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x