Published : 17 Aug 2019 11:54 AM
Last Updated : 17 Aug 2019 11:54 AM

அபார செல்வாக்குடன் வலம்வரும் விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலர்: மவுனம் காக்கும் கல்வித்துறை உயர் அதிகாரிகள்

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் அரசியல் செல் வாக்கு மற்றும் அதிகாரிகள் ஆதரவுடன் பொறுப்பு கல்வி அலுவலர் ஒருவர் ஆசிரியர் பணியிட மாற்றம், மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பிரச்சினைகளில் தலையிட்டு அபார பலத்துடன் வலம் வருவதாக புகார் எழுந்துள்ளது.

விருதுநகர் அருகே உள்ள சத்திரரெட் டியபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வரு பவர் மோகன். இவர் தற்போது, விருதுநகர் மாவட்டக் கல்வி அலுவலாக கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் பொறுப் பேற்று கடந்த ஒன்றரை ஆண்டுகளில் விருதுநகர் மாவட்டக் கல்வி அலுவலராகப் பொறுப்பேற்க வந்த 3 அதிகாரிகளை இவர் பணியேற்க விடாமல் திருப்பி அனுப்பியதாக புகார்கள் எழுந்துள்ளன. இவர் மாவட்டக் கல்வித்துறையில் ஆதிக்கம் செலுத்தி வரு வதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது:

விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றி, தற்போது சென்னையில் கல்வித்துறை நிர்வாகப் பிரிவில் இணை இயக்குநராகப் பணியாற்றி வரும் நபருக்கும், ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு முக்கிய புள்ளி ஒருவருடனும் மோகனுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது.

இவர்கள் மூலம் சீனியர்களை மாவட்டக் கல்வி அலுவலராகப் பொறுப்பேற்க விடாமல் தடுத்தார். தான் அப்பொறுப்புக்கு வந்தது மட்டுமின்றி, நேற்று முன்தினம் மாவட்ட கல்வி அலுவலராகப் பொறுப்பேற்க வந்த வளர்மதி மற்றும் தற்போது சிவகாசி மாவட்ட கல்வி அலுவலராகப் பணியாற்றும் கிருஷ்ணமூர்த்தி உட்பட 3 பேரை விருதுநகர் மாவட்டத்தில் பொறுப்பேற்கவிடாமல் மோகன் திருப்பி அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மாவட்டக் கல்வி அலுவலர் பொறுப்பை ஏற்ற பிறகு, மீண்டும் தலைமை ஆசிரியர் பணிக்குத் திரும்புவதை விரும்பாத மோகன், அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் பணி நியமனங்களில் தலையிட்டதாக கல்வித்துறை அலுவலர்கள் கூறுகின்றனர்.

அதோடு, "அடுத்த ஆண்டில் பணி மூப்பு அடிப்படையில் தனக்கு மாவட்டக் கல்வி அலுவலர் பதவி கிடைக்கலாம் என்பதால், அதுவரை தானே விருதுநகர் மாவட்டக் கல்வி அலுவலராகப் பொறுப்பு வகிக்க திட்டமிட்டு அவர் செயல்படுவதாக கல்வித்துறை வட் டாரங்கள் தெரிவித்தன.

அரசியல் மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகளிடம் செல்வாக்கு பெற்றுள்ளதால், மாவட்டத்தில் மூத்த அதிகாரிகள்கூட இவரைப் பற்றி பேசத் தயங்குகின்றனர். மாவட்ட ஆட்சியரும், முதன்மைக் கல்வி அலுவலரும் இவரது செயல்பாட்டில் தலையிடுவதே இல்லை" என்றும் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

"இதில், கல்வித்துறை தலையிட்டு நிரந்தரமாக மாவட்டக் கல்வி அலுவலரை நியமிக்க வேண்டும். அப்போதுதான், இந்தக் குளறு படிகள் சரியாகும் என்கிறார்கள் விருதுநகர் கல்வி மாவட்டத்தில் உள்ள சில ஆசிரியர்கள்.

இதுகுறித்து மோகனிடம் கேட்டபோது, மாவட்டக் கல்வி அலுவலராக பொறுப்பேற்க வந்த வளர்மதி, உடனடியாக பணியிட மாற்றம் பெற்று சென்றதற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தேவை இல்லாமல் என் பெயரை இழுக்க வேண்டாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x