Published : 17 Aug 2019 10:39 AM
Last Updated : 17 Aug 2019 10:39 AM

வேளாண் பொறியியல் துறையின் சார்பில் ரூ.10 லட்சம் மானியத்தில் வாங்கிய அரவை இயந்திரங்கள் மூலம் லாபம் ஈட்டும் விவசாயிகள்

மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கும் இயந்திரம்.

த.சத்தியசீலன்

கோவை

வேளாண் பொறியியல் துறை மானியத்தில் அமைக்கப்பட்ட சொக்கனூர் மதிப்பு கூட்டு இயந்திர மையம் வருவாய் ஈட்டி வருகிறது. இதனால் 5 கிராம விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறை மூலம், நீடித்த நிலையான மானாவாரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கிணத்துக்கடவு அருகேயுள்ள சொக்கனூரில், பசுமை தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் மூலமாக மதிப்பு கூட்டு இயந்திர மையம் அமைக்கப்பட்டுள்ளது.

வேளாண் பொறியியல் துறை மூலமாக இம்மையத்துக்கு சிறு தானியங்களான கம்பு, ராகி, வரகு, சோளம், மக்காசோளம், மற்றும் கோதுமை ஆகியவற்றை அரைக் கும் இயந்திரம், மாவு சலிக்கும் இயந்திரம், கடலையில் தோல் நீக்கும் கருவி, தானியங்களின் தோல், உமி நீக்கும் கருவி, பேக்கிங் இயந்திரம், எடை போடும் இயந்திரம், கடலை, எள் மற்றும் தென்னை கொப்பரை ஆகியவற்றிலிருந்து எண்ணெய் பிழியும் கருவி, எண்ணெய் வடி கட்டி, எண்ணெயை பாட்டிலில் நிரப்பும் இயந்திரம் ஆகிய 9 இயந் திரங்கள், ரூ.13.30 லட்சம் மதிப்பீட் டில் வாங்கப்பட்டன. இதற்கு ரூ.10 லட்சம் மானியம் வழங்கப்பட்டது. இம்மையம் தற்போது வருவாய் ஈட்டி வருவதுடன், 5 கிராம விவசாயிகளுக்கும் பயனளித்து வருகிறது.

இம்மையத்தை நடத்தி வரும் உ.திருவேங்கடம் கூறும்போது, ‘இம்மையத்தில் கிலோ ரூ.90-க்கு, 2650 கிலோ கொப்பரையை ரூ.2,38,500-க்கு வாங்கி, அதை மதிப்பு கூட்டி ரூ.42,400 செலவில் எண்ணெய் தயாரித்த வகையில், ரூ.2,80,900 செலவிடப்பட்டது.

1,590 லிட்டர் தேங்காய் எண்ணெய் தயாரித்து, லிட்டர் ரூ.230-க்கு, விற்ற வகையில் ரூ.3,65,700 வருவாய் ஈட்டினோம். இதில் ரூ.84, 800 நிகர லாபம் கிடைத்தது. ரூ.85 வீதம் 2,800 கிலோ கடலை ரூ.2,38,000-க்கு வாங்கப்பட்டது. அதிலிருந்து எண்ணெய் தயாரிக்க ரூ.2,80,000 செலவானது. 1,316 லிட்டர் கடலை எண்ணெய் தயாரித்து, லிட்டர் ரூ.220-க்கு விற்ற வகையில் ரூ.2,89,520 வருவாய் கிடைத்தது. நிகர லாபமாக ரூ.9,520 கிடைத்தது.

இவற்றில் இருந்து கிடைத்த கழிவுகள் மூலம் தென்னை புண்ணாக்கு தயாரித்து, கிலோ ரூ.25 வீதம் 927 கிலோ விற்ற வகையில் ரூ.23,175, கடலை புண்ணாக்கு தயாரித்து கிலோ ரூ.35 வீதம், 1400 கிலோ விற்ற வகையில்,ரூ. 49,000, கடலை உமி ரூ.2 வீதம் 560 கிலோ விற்ற வகையில் ரூ.1,120 என ரூ.73,295 வருவாய் கிடைத்தது.

வாடகை அடிப்படையில் 2,237 கடலை கிலோ ரூ.10-க்கு அரைத்து எண்ணெய் பிழிந்து கொடுத்ததில், ரூ. 22,370 செலவானது. இதில் ரூ.13,422 செலவு போக, ரூ.8,948 நிகர லாபம் கிடைத்தது.1757 கிலோ தென்னை கொப்பரையை கிலோ ரூ.10-க்கு எண்ணெய் பிழிந்து கொடுத்ததில் கிடைத்த வாடகை ரூ.17,570. இதில் ரூ. 10,542 செலவு போக, ரூ.7,028 லாபம் கிட்டியது.

ரூ.3 வீதம் 2793 கிலோ மக்காச்சோளம் அரைத்து கொடுத்த வகையில் கிடைத்த வாடகை ரூ.8,379, செலவு ரூ.2,793, நிகர லாபம் ரூ.5,586 கிடைத்தது.

536 கிலோ வரகு உமி நீக்கி கொடுத்த வகையில் கிலோவுக்கு ரூ.3 வீதம் ரூ.1,608 வாடகை கிடைத்தது. ரூ.536 செலவு போக, ரூ.1,072 லாபம் கிடைத்தது. இம்மையம், 9 மாதங்களில் மொத்தம் ரூ.1,90,249 லாபம் ஈட்டியுள்ளது' என்றார்.

இது குறித்து வேளாண் பொறியியல் துறை கோவை கோட்ட கண்காணிப்பு பொறியாளர் என்.உன்னிகிருஷ்ணன், செயற்பொறி யாளர் எஸ்.சோமசுந்தரம், உதவி செயற்பொறியாளர் எஸ்.ரேணுகாதேவி ஆகியோர் கூறும்போது, ‘சொக்கனூர் தொகுப்பில் உள்ள சொக்கனூர், பொட்டையாண்டி பிரம்பு, வடபுதூர், சொலவம்பாளையம், குதிரையாளம்பாளையம் ஆகிய கிராம விவசாயிகள் தங்களது உற்பத்தி பொருட்களை இம்மையத்தில் மதிப்பு கூட்டி கூடுதல் லாபம் பெற ஏதுவாக அமைந்துள்ளதால் அவர்களது வாழ்வாதாரம் மேம்பாடு அடைந்துள்ளது. இதேபோல் மதிப்பு கூட்டு இயந்திர மையங்கள் அமைக்க விவசாய குழுவினர் விண்ணப்பிக்கலாம்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x