Published : 16 Aug 2019 16:57 pm

Updated : 16 Aug 2019 16:57 pm

 

Published : 16 Aug 2019 04:57 PM
Last Updated : 16 Aug 2019 04:57 PM

டிஜிட்டலாக்கப்பட்ட ஓலைச்சுவடிகள்; பொதுபயன்பாட்டுக்கு வராத சூழல்: பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் மீது எழும் புகார்

complaints-arising-from-french-research-institutec
பிரெஞ்சு ஆய்வு நிறுவனம், படம் எம்.சாம்ராஜ்

புதுச்சேரி

தமிழின் சங்க கால ஓலைச்சுவடிகளைப் பாதுகாப்பதாகப் பெற்று, அதை டிஜிட்டலாக்கி விட்டு இணையத்தில் பதிவேற்றி பொதுப்பயன்பாட்டுக்குத் தர மறுப்பதாக தூரக்கிழக்கு நாடுகளுக்கான பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் மீது புகார் எழுந்துள்ளது.


தூரக்கிழக்கு நாடுகளுக்கான பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் (EFEO), உலகின் தொன்மையான மொழி வளர்ச்சி சார்ந்து நூற்றாண்டுகாலமாக இயங்கி வருகிறது. ஆசிய நாகரிகங்கள் பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ள இந்நிறுவனம் கடந்த 1898-ல் வியட்நாமில் தொடங்கப்பட்டது. இதற்கென சுமார் 12 நாடுகளில் 18 ஆராய்ச்சி மையங்கள் நிறுவப்பட்டு இயங்குகிறது. அந்தந்த பகுதி வரலாறு, மொழியியல், மானுடவியல், தொல்பொருள் தொடர்பான ஆராய்ச்சிகளை சம்பந்தப்பட்ட துறை சார்ந்த நிபுணர் உதவியோடு நடத்துகின்றனர்.

இந்தியாவில் தமிழ், சமஸ்கிருதம் பற்றி ஆய்வுப் பணிகளை பல்வேறு வகைகளில் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கையெழுத்துப் பிரதிகளான சங்க இலக்கியத்தின் பிரதிகளின் ஓலைச்சுவடிகளை டிஜிட்டலாக்குகின்றனர். கடந்த 2004-ல் சங்கம் என்ற திட்டத்தைத் தொடங்கினர். அதன் மூலம் குறுந்தொகை, கலித்தொகை மற்றும் அகநானூறை அசல் வடிவில் எவ்வித மாற்றமும் இல்லாமல் டிஜிட்டலாக்கி வெளியிட்டுள்ளனர்.

இத்திட்டத்தின் தொடர்ச்சியாக கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பிய ஆராய்ச்சி கவுன்சிலின் நிதியுதவியோடு நெட் தமிழ் திட்டத்தை ஆரம்பித்தனர். அதில் 3000 பழமையான சங்கத் தமிழ் இலக்கியங்களான பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், ஐங்குறுநூறு, புறநானூறு, தொல்காப்பியம், மணிப்பிரவாள கடையில் எழுதப்பட்ட தமிழ் உரைநடைகள் என்று அனைத்தையும் இத்திட்டத்தில் டிஜிட்டலாக்கி வருகின்றனர்.

இதற்கு நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டு பத்து ஆண்டுகளில் தமிழ் ஓலைச்சுவடிகளைப் பாதுகாத்து வரும் நூலகங்கள், மடங்கள், ஆதீனங்களுக்குச் சென்று அவர்களின் சேகரிப்பில் உள்ள ஓலைச்சுவடிகளை ஸ்கேன் செய்தனர். ஆனால் அவற்றை இணையத்தில் பதிவேற்றி பொதுப்பயன்பாட்டுக்குக் கொண்டு வரவில்லை என்ற புகார் புதுச்சேரியிலுள்ள தூரக்கிழக்கு நாடுகளுக்கான பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் மீது எழுந்துள்ளது.

பொதுப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதாக கூறிதான் ஓலைச்சுவடிகளை எல்லாம் பாதுகாத்து வந்தோரிடம் பெற்றனர். பலரும் அதை நல்ல விஷயம் என தந்தனர். ஆனால், இப்போது அவற்றை டிஜிட்டலாக்கிவிட்டு அதை தங்களுக்குச் சொந்தம் கொண்டாடுகின்றனர். பொதுப்பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தால் தமிழ் ஆய்வுக்கும், ஆர்வலர்களுக்கும், மக்களுக்கும் பயன் என்று புகார் தெரிவிக்கத் தொடங்கினர். உலகத் தமிழர் பேரமைப்பு பொதுச்செயலர் நா.மு. தமிழ்மணி இதுதொடர்பான புகாரை அவர்களுக்கு அனுப்பினார்.

நிறுவனத்தின் இயக்குநர் டொமினிக் குட்டால் இதற்கான பதிலில், "நூல் வாரியாக தரம் பிரிக்கும் பணி நடைபெறுகிறது. லட்சக்கணக்கில் ஓலைச்சுவடி இருப்பதால் அதைப் படித்து வகைப்படுத்த சில ஆண்டுகளாகும். ஏற்கெனவே ஸ்கேன் செய்த ஓலைச்சுவடிகள் விவரங்கள் அனைத்தும் நூலகங்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஆய்வுப்பணிக்காதான் ஓலைச்சுவடிகளை ஸ்கேன் செய்தோம். அதை அனைவரின் பயன்பாட்டுக்கு தருவது எங்களின் இறுதி முடிவே. ஸ்கேன் செய்த ஓலைச்சுவடிகளை இணையத்தில் பதிவேற்றம் செய்வதிலும் சிக்கல் உள்ளது. ஓலைச்சுவடி டிஜிட்டல் பதிப்பை பத்திரப்படுத்தியுள்ளனர். நாங்கள் டிஜிட்டல் படுத்தியுள்ள ஓலைச்சுவடிகளை ஆய்வுக்காகப் பயன்படுத்த எங்களை அணுகலாம். நாங்கள் தர மறுக்க மாட்டோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

உலகத் தமிழர் பேரமைப்பு பொதுச்செயலர் நா.மு. தமிழ்மணி கூறுகையில், "உலக மக்களின் நிதி உதவியோடு நடந்த ஆய்வுப் பணியான நெட் தமிழ் திட்டப் பணிகள் அனைத்தும் உலக மக்களின் பொதுச்சொத்து. அதை தனக்கானது என சொந்தம் கொண்டாடுவது தவறு. இணையத்தில் பதிவேற்றம் செய்து, பொதுவெளியில் வைக்கக்கோரி புதுச்சேரி பிரெஞ்சு தூதரகம், பிரான்ஸுக்கான இந்தியத் தூதர், பிரெஞ்சு ஆய்வு நிறுவனத் தலைமை அலுவலகத்துக்கு கடிதம் தந்துள்ளோம். பதிலுக்காகக் காத்திருக்கிறோம்" என்றார்.

செ. ஞானபிரகாஷ்


ஓலைச்சுவடிகள்பிரெஞ்சு ஆய்வு நிறுவனம்புதுச்சேரிPuduchery

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x