Published : 16 Aug 2019 02:32 PM
Last Updated : 16 Aug 2019 02:32 PM

‘பிரதமர் - பெரியார் வழியில் வந்து நிற்கிறார்’: சுதந்திர தின உரைக்கு கி.வீரமணி பாராட்டு

கி.வீரமணி: கோப்புப்படம்

சென்னை

மக்கள்தொகைக் கட்டுப்பாடு பற்றி பிரதமர் மோடி ஆற்றிய உரையை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வரவேற்றுள்ளார்.

இதுதொடர்பாக கி.வீரமணி இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவின் வளர்ச்சி அனைத்துத் துறைகளிலும் என்பதை நடைமுறையில் கொண்டு வந்து செயல்படுத்த விழையும் எந்த முயற்சிக்கும் முன்னோடித் திட்டம் மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதேயாகும்.

1930 ஆண்டுகளிலேயே குடும்பக் கட்டுப்பாடு பற்றி பெரியார்

1930களிலேயே பெரியாரும், அவர் தம் அரசியல் சாரா சுயமரியாதை இயக்கமும் இந்தியாவிலேயே முதன்முதலில் குடும்பக் கட்டுப்பாடு என்பதை கொள்கை வேலைத் திட்டமாகப் பிரச்சாரம் செய்தார். 'கர்ப்ப ஆட்சி' எனும் நூலினையும் வெளியிட்டார்.

அப்போது மூடநம்பிக்கையில் மூழ்கியிருக்கும் பலர் சுயமரியாதைக்காரர்களையும், பெரியாரையும் இழித்தும், பழித்தும், எதிர்த்தும் பேசினர்.

இந்து மதக் கண்ணோட்டத்தில் எதிர்த்தனர்

இப்போதும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் உட்பட பலரும், இந்துக்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்டால், அவர்கள் சிறுபான்மையினர், மற்ற மதத்தவர்கள் குடும்பக் கட்டுப்பாட்டினை மத அடிப்படையில் செய்யாதபோது, இந்துக்கள் எண்ணிக்கை குறைந்துவிடாதா? எனவே, இந்துக்கள் ஒவ்வொருவரும் 10 பிள்ளைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மதக் கண்ணோட்டத்தில் வெறித்தனமாகப் பேசினர்.

சிலர் தவறான புள்ளி விவரங்களைத் தந்து விஷமத்தை விதைத்தனர்.

பெரியார், சமுக வளர்ச்சி, முன்னேற்றம், மனித குலத்தின் சரி பகுதியான பெண்களின் உரிமை வாழ்வு, சமத்துவ சமவாய்ப்புக் கண்ணோட்டத்திலேயே இந்த மக்கள்தொகைக் கட்டுப்பாட்டின் அவசியம் குறித்து சுமார் 85 ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியாவின் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுப் பிரச்சாரத்தின் முன்னோடியாக இருந்தார்.

'குடிஅரசு' இதழில் கருத்துப் பிரச்சாரம்!

அச்சப்பட்ட வாழ்வு இணையருக்கு அறிவியல் ரீதியாக விளக்க அப்போது பச்சை அட்டை வார இதழ் 'குடிஅரசில்' தொடர் கட்டுரைகளையும், துண்டு வெளியீடுகளையும் டாக்டர் மேரி ஸ்டோப்ஸ் போன்று இங்கிலாந்து நாட்டு மருத்துவ அறிஞர்களின் கருத்துகளையும் மொழிபெயர்த்து வெளியிட்டுப் பரப்பினார்கள்.

தாம் உருவாக்கிய சுயமரியாதைத் திருமணங்களில் பேசும்போது, ஒன்றிரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதோடு நிறுத்திக் கொள்ளவேண்டும் என்பதை தொடர் பிரச்சாரமாகச் செய்ததின் விளைவு - தமிழ்நாட்டில் மற்ற மாநிலங்களைவிட மக்கள்தொகை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதை ஐ.நா.வின் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு அமைப்பு அறிக்கை வெளியிட்டு, அது பல ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கில நாளேடுகளில் செய்தியாக வெளிவந்துள்ளது.

சீனாவையும் மிஞ்சும் இந்தியா

சீனாவையே இந்திய மக்கள்தொகை மிஞ்சிடும் அபாயம் உள்ளது. 1947-க்கு முன்பிருந்த பாகிஸ்தானும் சேர்ந்த இந்தியாவின் மக்கள்தொகை வெறும் 30 கோடி மக்களே. இன்றோ இந்தியாவின் மக்கள்தொகை மட்டும் 136 கோடி. எவ்வளவு வளர்ச்சித் திட்டங்கள் வந்தாலும், அவை 'யானைப் பசிக்கு சோளப்பொறி' என்பது போலவே ஆகிவிடுகிறது!

பெண்ணுரிமைக் கண்ணோட்டமே

பெரியாரின் குடும்பக் கட்டுப்பாடு - மகளிர் உரிமையையும், மாண்பையும், சுயமரியாதையையும், சுதந்திரத்தையும் பாதுகாக்கும் கண்ணோட்டமே அதன் முக்கிய அடிப்படையாகும்! எப்படி இருந்தபோதிலும், எந்த மதத்தவராக இருந்தாலும் அளவான குடும்பம்தான் வளமான குடும்பமாக இருக்க முடியும் என்பதே யதார்த்தம் ஆனபடியால், இதில் மதக்கண்ணோட்டம், சாதிக் கண்ணோட்டம், அரசியல் பார்வை - நுழையக் கூடாது. ஓட்டுக் கண்ணோட்டத்தைவிட, நாட்டுக் கண்ணோட்டத்தையே முக்கியமாகக் கருதவேண்டும்.

பிரதமர் மோடியின் உரை!

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையில், இந்த அம்சம் வலியுறுத்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. நாட்டில் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றுக்கு விடை காண வேண்டிய இக்காலகட்டத்தில், மக்கள்தொகைக் கட்டுப்பாட்டினை வலியுறுத்த வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைக்கப்படக் கூடாது

அதேநேரத்தில், மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்டு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை நிர்ணயிக்கும் தற்போதைய முறையினை, குடும்பக் கட்டுப்பாட்டினை சிறப்பாகச் செயல்படுத்தும் மாநிலங்களைத் தண்டிக்கும் வகையில், எம்.பி.,க்கள் எண்ணிக்கையைக் குறைக்கவும் கூடாது. இந்தப் பிரச்சினையில் பிரதமர் - பெரியார் வழியில் வந்து நிற்கிறார் இப்போது! காலத்தின் கட்டாயம் இது", என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x