Published : 15 Aug 2019 11:43 AM
Last Updated : 15 Aug 2019 11:43 AM

நெல்லை தம்பதிக்கு 'அதீத துணிவு' விருது: சுதந்திர தின விழாவில் முதல்வர் வழங்கினார்

சென்னை,

கொள்ளையர்களைத் துணிச்சலாக விரட்டத் துணிவுடன் போராடிய நெல்லை தம்பதியைப் பலரும் பாராட்டி வரும் நிலையில், அவர்களுக்கு அதீத துணிச்சலுக்கான விருது இன்று வழங்கப்பட்டது. சுதந்திர தின விழாவில் விருதை முதல்வர் வழங்கினார்.

நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தில் வசிப்பவர் சண்முகவேல், இவரது மனைவி செந்தாமரை. இவர்களது மகன்கள் பெங்களூரு மற்றும் சென்னையில் வேலை பார்த்து வருகின்றனர். தங்களது ஓய்வுக்காலத்தில் தங்கள் சொந்த ஊரின் தோட்டத்து வீட்டில் தம்பதியர் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 11-ம் தேதி இரவு கணவன்-மனைவி இருவரும் தங்களது பண்ணை வீட்டில் இருந்தனர். அப்போது அவர்களது வீட்டிற்கு முகமூடி அணிந்து அரிவாளுடன் வந்த 2 கொள்ளையர்களில் ஒருவன் கண்ணிமைக்கும் நேரத்தில் சண்முகவேலின் பின்பக்கமாக வந்து கழுத்தில் துண்டைப்போட்டு இறுக்கினான்.

சத்தம் கேட்டு வெளியில் வந்த சண்முகவேலின் மனைவி செந்தாமரை தீரத்துடன் செயல்பட்டு கொள்ளையர்களை நோக்கி வீட்டிலிருந்த பொருட்களை வீசினார். இதனால் கழுத்தில் துண்டைப்போட்டு இறுக்கிய கொள்ளையன் பிடியை விட, அதிலிருந்து மீண்ட சண்முகவேல் பக்கத்திலிருந்த நாற்காலியை எடுத்து கொள்ளையர்கள்மீது வீசினார்.

அதன்பிறகு கணவன்- மனைவி இருவரும் சேர்ந்து கொள்ளையர்களுடன் போராடினர். கொள்ளையர்கள் இருவர் கையிலும் வீச்சரிவாள் இருந்தும் அஞ்சாமல் மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் காப்பாற்றும் விதமாகப் போராடினர். ஒருகட்டத்தில் அருகில் சென்று கொள்ளையனைத் தாக்கினார் செந்தாமரை. அவரின் மீது கோபம் கொண்ட கொள்ளையன், அரிவாளால் வெட்ட அவருக்குக் கையில் காயம் ஏற்பட்டது.

விடாமல் தம்பதிகள் தீரத்துடன் போராடுவதைப் பார்த்து பயந்துபோன கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடினர். இவை அனைத்தும் வீட்டிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அந்தக் காட்சி தமிழகம் தாண்டி இந்தியா முழுவதும் வைரலானது. தம்பதியின் வீரத்தைப் பிரபலங்களும் பாராட்டினர். அமிதாப் பச்சன் ‘பிராவோ’ என காணொலியைப் பதிவிட்டு வாழ்த்தியிருந்தார்.

ஹர்பஜன் சிங்கும் வாழ்த்தியிருந்தார். நெல்லை எஸ்.பி. நேரில் சென்று தம்பதியைப் பாராட்டினார். போலீஸார் கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர். இந்நிலையில் நெல்லை தம்பதிக்கு விருது வழங்க, மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்ததை அடுத்து அவர்களுக்கு அதீத துணிச்சலுக்கான விருது வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது.

சென்னையில் இன்று காலை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் 'அதீத துணிவு' விருதை தம்பதியர் இருவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கையால் பெற்றனர். இருவருக்கும் சான்றிதழ், தனித்தனியே தங்கப்பதக்கம் மற்றும் ரூ.2 லட்சம் வெகுமதி ஆகியவை வழங்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x